‘பொலிஸ் நிர்வாகத்தின் கீழ், இந்த நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் ரீதியாக நபர்களை வேட்டையாடும் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்’ என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை காலைச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தம்மை விசாரிப்பதற்காக அழைக்கப்பட்ட விடயம் பழையது என்பதால் அதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதனால் அதற்கு மேலும் காலஅவகாசம் வழங்குமாறும் ஆணைக்குழுவிடம் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில், நேற்று காலை அங்கு சென்று திரும்பிய அவர், அவருக்கு ஆதரவாக ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், ‘இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிறந்த அரச அதிகாரி நானாவேன்.
எனக்கே இந்த நிலைமை ஏற்பட்டதென்றால், ஏனைய அதிகாரிகளால் எவ்வாறு சிறப்பாக சேவையாற்ற முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.
‘எனக்கு எதிராக அரசியல் ரீதியாக சேறுபூசும் நோக்கிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன’. எவ்வாறாயினும், எனக்காக இவ்விடத்துக்கு வந்த எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கூறுகையில், அங்கு கூடியிருந்தவர்கள் ‘எங்கள் சிங்கம், வீரச் சிங்கம்’ என்று கோஷமெழுப்பினர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘நான் ஒருபோதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை.
பொலிஸ் நிர்வாகத்தின் கீழ், இந்த நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக நபர்களை வேட்டையாடும் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்’ என்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டில் மிஹின் லங்கா நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவை நேற்றைய தினத்தில் (23), இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, தனது சட்டத்தரணிகளுடன் ஆணைக்குழுவின் முன்னால் நேற்றுக் காலை 9 மணியளவில் பிரசன்னமாகிய அவர், ‘மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டிக்கொண்ட பின்னரே அவை தொடர்பில் வாக்குமூலமளிக்க முடியும்.
அதற்காக, தனக்கு கால அவகாசம் வழங்குமாறு’ தனது சட்டத்தரணிகளூடாக ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார்.
இதற்கு இணங்கிய ஆணைக்குழு, மேற்படி மிஹின் லங்கா விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கோட்டாபயவுக்கு வேறொரு திகதியைப் பெற்றுக்கொடுக்க தீர்மானித்தது.