எதிர்வரும் 2019ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடிப்பதே தனது இலக்கு என்று அதிரடி வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
இதைத் தொடர்ந்து 2011ல் நடந்த 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியில் சகலதுறை வீரராக அசத்திய யுவராஜ் சிங் இந்தியாவுக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்தார். இந்த தொடரில் 362 ஓட்டங்களுடன் 15 விக்கெட்டுக்களும் வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பின் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியில் இடம்பிடித்தார். ஆனால், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்கிடைக்காமல் திணறி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணம் வரை விளையாட இருப்பதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் கூறுகையில், வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாட தற்போது கடினமாக பயிற்சி செய்து வருகிறேன்.
உண்மையாகவே, நான் ஏன் இன்னும் சர்வதேச கிரிக்கெட் விளையாடக்கூடாது. மீண்டும் அணிக்கு திரும்பினால், சிறப்பாக விளையாடி அணியில் இரண்டு மூன்று வருடங்கள் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.