என் கிரிக்கெட் வாழ்வில் இன்னும் சில ஆண்டுகளே எஞ்சியுள்ளன – கோஹ்லி

120

இந்திய அணியின் தலைவரும், ரன் மிஷின் என்றும் அழைப்படும் விராட் கோஹ்லி, இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவேன் என கூறியுள்ளதால், ரசிகர்கள் அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோஹ்லி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதம், ஒருநாள் போட்டிகளில் அவரது 36-வது சதம், 60-வது சர்வதேச சதம் என சாதனை படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை கோஹ்லி, அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் முறியடித்துவிடுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கோஹ்லி ஓட்டங்களை குவிப்பது, தனிப்பட்ட முறையில் அவருக்கு சாதனைகளை பெற்றுக்கொடுத்தாலும், அவரது ஆட்டமும் அவர் குவிக்கும் ஓட்டங்களும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்கிறது.

இந்திய அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். அவரது கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு துடுப்பாட்ட வீரராக அவரது ஆட்டத்தை யாரும் விமர்சிக்கவே முடியாது.

இந்நிலையில் 29 வயதான கோஹ்லி மேற்கிந்திய் தீவு அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பின் அவர் பேசிய விடயம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவர், என் கிரிக்கெட் வாழ்வில் இன்னும் சில ஆண்டுகளே எஞ்சியுள்ளன. அதனால் ரசித்து மகிழ்ந்து எனது ஆட்டத்தை ஆடிவருகிறேன்.

நாட்டுக்காக விளையாடுவது என்பது மிகப்பெரிய கௌரவம். அது அனைவருக்கும் கிடைத்துவிடாது. அதனால் எந்த ஒரு போட்டியையும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை.

எல்லா போட்டிகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து ஆடிவருகிறேன். நமது விளையாட்டுக்கு நாம் நேர்மையாக இருந்தால், அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை நம்புபவன் நான். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

கோஹ்லிக்கு தற்போது தான் 29 வயதாகிறது. அவர் குறைந்தது 36 முதல் 37 வயது வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இன்னும் 7 முதல் 8 ஆண்டுகள் வரை அவர் விளையாடலாம்.

7 முதல் 8 ஆண்டுகாலம் என்பது மிக நீண்டகாலம் தான், இது குறைந்த காலம் அல்ல. ஆனால் கோஹ்லி இன்னும் குறைந்த ஆண்டுகள் தான் ஆடுவதாக தெரிவித்திருப்பதன் மூலம் 35 வயதுக்கு உள்ளாகவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

SHARE