முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலகம் வன்னிவிழாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மாங்குளம் மல்லாவி வீதியின் மூன்றுமுறிப்பு சந்தியிலிருந்து எட்டு கிலோமீட்டர் காட்டுப்பகுதியினுடாக பயணித்து இந்தக் கிராமத்திற்கு செல்லவேண்டியுள்ளது வைத்தியசாலை சந்தை கடை என எந்த ஒருதேவைக்கும் 13 கிலோமீட்டரிலுள்ள மாங்குளத்திற்கு அல்லது 18 கிலோமீட்டரிலுள்ள மல்லாவிக்கே சென்று வரவேண்டியுள்ளது.
இந்த காட்டுப் பகுதியூடாக பயணிக்கும் அச்சத்தினால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தக்கிராமத்திற்கான வீதிகள் புணரமைப்பு செய்யப்படவில்லை தற்போது பெய்து வரும் மழையினால் பல இடங்களிலும் வெள்ளநீர் பாய்கிறது வீதிகள் பலத்த சேதமடைந்து வருகிறது.
தேர்தல் வாக்குக்காக மின்கம்பங்கள் நடப்பட்டதே தவிர மின் இணைப்புக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயத்தையே நம்பிவாழும் இந்த கிராம மக்களின் வயல்களையும் மழை அழித்துவிட்டது. இரண்டு மூன்று தடவையாக நெல்லு போடுவதும் அழிவதுமாக உள்ளது மழையினால் பல இடர்களை எதிர்கொள்ளும் எமக்கு இதுவரைக்கும் எந்த வெள்ள நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று மக்கள் கண்னீருடன் கூறுகின்றனர்.