எமது இனத்தை பலவீனப்படுத்த இன்னும் முயற்சிகள் நடக்கின்றன: சி.சிறீதரன்

404

 

யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன் சுகிர்தன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர்.நித்தியானந்தா, கரவை ஒன்றிய போசகர் செல்வரட்ணம், கரவை ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம்,

வைத்தியசாலை நலன்புரிச்சங்க தலைவர் ராகவன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களான இரத்தினசிங்கம், பரம்சோதி, வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகன், வடமராட்சி கட்சி அமைப்பாளர் லவன், கிளிநொச்சி பளை அக்கராயன் அமைப்பாளர்களான சாந்தன், கரன் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,

எமது சமூகம் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு அரசியல், பொருளாதார நிலைமைகளை தாண்டி வந்துள்ள நிலையில் இப்பொழுதும் ஒருவகையான அரசியல் சூழ்ச்சிக் காலத்தில் வாழ தலைப்பட்டிருக்கின்றோம்.

கால ஓட்டத்தில் இது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளபோதும் எம்மிடையே இருக்கக்கூடிய விழிப்புணர்ச்சிதான் எம்மை எமது நிலையில் தக்க வைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இன்றும் எமது இனத்தை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் எமது தாகத்தை தணித்து விடலாமென சில சக்திகள் கனவு காணுகின்றன.

இந்த நிலையில் நமது பயணம் தெளிவானதாகவும் ராஜதந்திரம் மிக்கதாகவும் இருக்க வேண்டியதாக இருக்கின்றது.

இதில் வெறுமனே பங்காளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் ஊடகங்களும் பங்காளிகளாக திறம்பட செயலாற்ற வேண்டியிருக்கின்றது.

பிரிவினைகளுக்கும் குரோதங்களுக்கும் நம்மிடையே இடம்கொடுக்காமல் பயணிப்பதே நமது இனத்திற்கு சிறந்தது என தெரிவித்தார்.

SHARE