எம்பிலிபிட்டிய நகரில் விருந்துபசாரமொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில், இரகசிய பொலிஸின் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய இரகசிய பொலிஸ் விசாரணை குழுவொன்றினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோவை பொலிஸார் நேற்று தெளிவூட்டினர்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மனைவி ஷஷிகா நிஷாமனி முனசிங்ஹ உள்ளிட்ட சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தொலைபேசி பயன்பாட்டு அறிக்கையை இரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.