எம்.எஸ்.காரியப்பர் கல்வெட்டு உடைப்பு

189
 (அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கு இன்று புதன்கிழமை (18 ) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி ஹென்றி மகேந்திரன் சுகவீனம் காரணமாக நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டதுடன் அவரது சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தாவும் நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்காத நிலையில் அவரது சார்பில் ஆஜரான பிரிதொரு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைவாக நீதவான் ஐ.என்.றிஸ்வான் மேற்படி தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதேவேளை கல்முனை மாநகர சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா ஆஜராகியிருந்ததுடன் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
கல்முனை பிரதான நெடுஞ்சாலையின் ஐக்கிய சதுக்க சந்தியில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதான நுழைவாயிலைத் தொட்டு, பொதுச் சந்தை வரையான பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக பலரை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச்சென்றிருந்தார்..
இதனைத்தொடர்ந்து அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட முறைப்பாட்டையடுத்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் முன்னைய விசாரணைகளுக்கு பிரதிவாதி ஹென்றி மகேந்திரன் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்ததுடன் அவரது சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE