16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 12 ரன் எடுத்த சென்னை கேப்டன் டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் 236 ஆட்டங்களில் ஆடி 24 அரைசதம் உள்பட 5004 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.
maalaimalar