எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

17

 

எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு தனியார் முதலீட்டாளரினால் முறையான ஏலத்தொகை சமர்ப்பிக்கப்படாவிடின், அதனை தனித்தனியாக மூன்று நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஸ்ரீலங்கன் கேட்டரிங், விமான நிலைய சேவை நடவடிக்கைகள் மற்றும் விமானச் செயற்பாடுகளை மூன்று நிறுவனங்களாகப் பிரித்து விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ஸ்ரீலங்கன் விமான நடவடிக்கைகளில் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் விமான நிலைய சேவை நடவடிக்கைகளில் நஷ்டம் ஏற்படவில்லை என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஏலத்தொகை
எனவே, கேட்டரிங் மற்றும் விமான நிலையச் சேவை நடவடிக்கைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அரசாங்கத்தின் கீழ் விமானச் செயற்பாடுகளை நடத்துவதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஏலத்தொகை 500 பில்லியன் ரூபா என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அண்மையில் இந்த விமான சேவையை கொள்வனவு செய்ய நான்கு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில், அரசாங்கம் எதிர்பார்த்த ஏலத்தொகை சமர்ப்பிக்கப்படாததால் மேலும் 45 நாட்களுக்கு விலைமனு அழைப்பை நீடிக்க துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE