அண்மைக்காலமாக அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஒருவர் பின் இன்னொருவராக விஜயம் செய்துவருவது தெரிந்ததே. என்றைக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய கைவசமாயிருந்த ஆட்சியதிகாரம் மைத்திரி-ரணில் தரப்பினருக்குக் கைமாற்றப்பட்டதோ அன்றிலிருந்தே இப்பிரதிநிதிகளின் இலங்கை வருகை அசாதாரணமாக அதிகரித்துமுள்ளது. இவர்கள் இலங்கைத் தீவுக்கு அதுவும் ஐ.தே.கவின் ஆட்சியதிகாரம் இடம்பெற்றிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்வதோடு வடக்குக்- கிழக்குத் தமிழர் தரப்பின் அரசியல் பிரதி நிதிகளான சம்பந்தன், சுவாமிநாதன், திருமதி.மகேஸ்வரன் ஆகியோரையும் மலையகத் தமிழ் மக்களின் முன்னணி அரசியல் பிரமுகர்களான மனோக ணேசன் போன்றவர்களையும், இஸ்லா மிய முன்னணி அரசியல் பிரமுகர்களான ரவூப் ஹக்கீம் முதலானோர்களையும் சந்தித்து ஆரவாரப்படுத்துவதும் வழக்கமானவொன்றாக அமைந்தும் உள்ளது. இவ்வமெரிக்கப் பிரதி நிதிகள் சிறுபான்மையான அரசியல் தலைவர்களைச் சந்தித்து முக்கியத்துவம் வழங்குவதால் தமிழ் மக்கள் உட்படச் சிறுபான்மை இனங்கள் அவர்கள் தமக்கு விமோசனத்தைப் பெற்றுத்தரப்போகின்றார்கள் என எண்ணுவதும் இயல்பானவொன்றாக இருக்கின்றது. ஆனால் புதிய உலகமயமாக்கல் என்னும் அகிலத்தில் வதியும் அனைத்து மக்களினதும் விரோதம் மிக்க கோட்பாட்டைத் தன்னகத்தே மிகக் கெட்டியாக இறுகப்பற்றிப்பிடித்து உலகம் முழுவதையுமே தனது ஏகாதிபத்தியக் கோரப்பசிக்குத் தீனியாக்கத் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அரச பிரதிநிதிகள் தமது தேசத்தின் இப்பெறுமதிமிக்க நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான இராஜதந்திரக் காய்நகர்த்தல்களைத் தவிர்த்துக்கொண்டு தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்க ளென எண்சாண் உடம்புக்குப் பிர தானியாக விளங்கும் சிரமானது முழுமையாகப் பிசகி நிற்பவர்களுங் கூடக்கருதமாட்டார்கள்.
ஆனால் தமிழ்பேசும் மக்களின் காவலர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொண்டிருக்கும் சம் பந்தன் போன்றவர்களும், அரசின் அடி வருடிகளான தமிழ் அமைச்சர்களும் இலங்கை தேசத்துக்கு அடிக்கடி விஜயம் செய்துகொண்டிருக்கும் அடக்குமுறை ஒடுக்குமுறையிலேயே ஆயுட்காலச் சுகங்காணும் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளுக்கு ஆலவட்டம், கொடிபிடித்து ஆர்ப்பரித்து நிற்பதும் அப்பிரதிநிதிகள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதோ தீர்த்துவைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்களெனத் தாரை, தப்பட்டைகளுடன் தமிழ் மக்களை நம்பவைக்க முயல்வதும் அவர்களுடைய அசாதாரணமான அரசி யல் வங்குரோத்துத்தனத்தைத் தான் பிரதிபலித்து நிற்கின்றது.
தோளில் கலப்பைகளுடனும், மண்வெட்டிகளோடும் கோவணங்கள் சகிதமாக இத்தேசத்திற்குச் சோறு போடும் விவசாயப் பெருங்குடிமக்கள் தலைநகர் கொழும்பில் அணி அணி யாகத் திரண்டுவந்து மைத்திரி-ரணில் அரசின் புதிய வரவு-செலவுத் திட்டம் தமது வயிற்றிலும் தம்மை நம்பியிருப்போரின் வயிற்றிலும் பேரி டியாக அடிக்கவிருப்பதாக அவ்வரவு- செலவுத் திட்டத்திற்குத் தமது பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் இன்றைய அரசியல் பின்புலத்தில் கோட்சூட் அணிந்து இலங்கைக்கு வருகை தரும் தமிழர் மீதான கொழும்பு அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆயுட்கால அனுசரணையாளர்களாக விளங்கும் அமெரிக்கப் பிரதிநிதிக ளோடு தாமும் அதேபாணியிலேயே கோட்சூட் அணிந்து கூடிக்குலவிக் கொண்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவர்களுடன் கூறப்படும், அரசியல் மக்களின் தலைவர்களெனக் கூறப்படும் அரசியலாளர்களின் உண்மையான இயல்பையும் அமெரிக்கப் பிரதிநிதி களின் இலங்கைக்கான தொடர் விஜயத்தின் நிஜமான நோக்கத்தையும் ஆணிவேறு அக்குவேறாக அம்பலப்படுத்தித் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இப்பிரதிநிதிகளின் வரு கையும் அவர்களோடு இங்குள்ள சிறுபான்மையின அரசியல் தலைவர்களெனப்படுவோரின் கள்ளக் காதலும் பாரிய ஆபத்தாகவே முடியுமெனத் தெளிவுபடுத்துவது தேசபக்தர்களினதும், தமிழ் உணர்வாளர்களினதும் உடனடிக் கடமையாகவும் இருக்கவேண்டும்.
இனி அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகளோடு கள்ளக்காதல் கொண்டுள்ள சம்பந்தன், சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன், மனோகணே சன், முஜிபர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் ஆகியவர்களுடைய தனிப்பட்ட அரசியல் வர்க்க நலன்களையும், அவர்களுடைய கட்சிகளின் பெயர்களிலேயே உள்ள கருத்தற்ற குளறுபடிகளை யும், தேர்தல்களின்போது இப் பாவஜென்மங்கள் போட்டியிடும் சின்னங்கள் உள்ளார்த்தங்களையும் உற்றுநோக்கி விலாவாரியாக ஆய்வு செய்து மிக விரைவில் அமெரிக்க ஏகாதிபத்திய வல்லாதிக்க சக்திகளினால் இலங்கைத் தீவுக்கும், அத்தீவில் வதியும் தமிழ்பேசும் மக்களுக்கும் வரவிருக்கும் பாரிய ஆபத்தைத்தடுத்து நிறுத்தவும் வேண்டும்.
முதலில் இவ்வாண்டின் தைத்திங்களில் இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வாக்களிக்கும் படியும் ஐ.தே.கவின் ஆட்சியதிகாரமானது தமிழ் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்குமெனவும் சிறையிருந்த மாவையார் உட்பட இலங்கைத் தமிழரசுக்சட்சியினால் மிகவும் வின யமுடன் வேண்டிக்கொண்டதை எடுத்துநோக்குவோம். தமிழரசுக் கட்சியினரின் வேண்டுதலையேற்று வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் மைத்திரிக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கியமையும் அதன் தொடர்ச்சியாக மாவை சேனாதிராஜா அவர்கள் எமது வேண்டுதலையேற்றுத் தமிழ் மக்கள் வாக்களித்தமையால் ஜனாதிபதியாகியுள்ள மைத்திரி அவர்கள் நன்றிக்கடனாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பாரெனக் சிரிப்புக்கிடமான ஒரு கருத்தைக்கூறித் தமது ஆற்றாமையை வெளிப்படுத்தி நின்றமையையும் யாவருமே அறிவர். அதன் பின்னர் சென்ற ஆவணி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஆட்சி யமைத்த மைத்திரி-ரணில் அரசுக்கே திறைமறைவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பார் அனுசரனை யாக விளங்கினர். வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாரின் நிலை இவ்வாறிருக்க, தலைநகரில் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட அரசி யல் கட்சியொன்று தமிழும் அற்ற முற்போக்கும் அற்ற யானைச் சின்னத்தின் கீழ்ப்போட்டியிட்டு மேலக மக்கள் முன்னணி என முன்னர் கபடி ஆடிய இக்கட்சியின் ஸ்தாபகர் மேல் மாகாணத்தின் தமிழ் வாக்காளர்களின் அமோக ஆதரவைப்பெற்று வெற்றிவாகை சூடி அமைச்சருமானதுடன் ஐ.தே.கவின் ஆட்சியதிகாரத்தில் உழைக்கும் மக்களினதும் தமிழ் மக்களினதும் காவலர் என்னும் முகமூடியை அணிந்துகொண்டு ஏகாதிபத்திய அமெரிக்காவிலிருந்து அண்மைக்காலமாகத் தொடர்ச் சியாகவும் அடிக்கடியாகவும் விஜயம் செய்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளை மிகவும் குதூகலமாக வரவேற்று தமிழினத்தையும், உழைக்கும் மக்களையும் ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொண்டிருக்கின்றார். இந் நபரின் முற்போக்கு முகமூடியையும் தமிழர் காவலர் என்னும் மர்மத்தையும் இனங்கண்டு தேசத்தின் உழைக்கும் பிரிவினரும், தமிழ் மக்களும் காலதா மதம் செய்யாமல் இந்நபரை அரசி யல் அரங்கிலிருந்து முழுமையாக அகற்றுவதோடு தம்மைத் தற் காத்துக்கொள்ளவும் வேண்டும். இந்நபரின் பாணியிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்னும் மிகப்பெருத்த முகமூடியோடு இஸ்லாமிய தரப்பினரில் ஒரு சிலர் புதிய கட்சியொன்றையும் ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான கட்சிகளின் உருவாக்கத்தையிட்டு உழைக்கும் மக்களும் சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினரை உள்ளடக்கிய இனக்குழுமங்களும் தமது எதிரிகள் விடயத்தில் கொண்டிருக்கவேண்டிய விழிப்புணர்வைவிட அதிகளவு விழிப்புணர்வைக்கொண்டிருக்கவும் வேண்டும். ஏனெனில் இம்முகமூடி நபர்கள் எதிரிகளைவிடவே மிகவும் ஆபத்தானவர்கள். இம் முகமூடி நபர்களோடு வடக்கின் ஐ.தே.க அரச அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், விஜயகலா போன்றோரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்களும் அண்மைக்காலமாக அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்காவின் இராஜ்ஜியப் பிரதிநிதிகளுக்கு இராஜபாடை விரிப்பது தேசத்தினதும், தமிழ் மக்களினதும் எதிர்காலத்தை எவ்வகையில் இட்டுச்செல்லும் என்பதை நன்கு சீர்தூக்கிப்பார்ப்பது இன்றைய துரதிட்டவசமான நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மிக வும் இன்றியமையாதவொன்றாக அமைந்துள்ளது.
அமெரிக்கப் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான இலங்கை விஜயத்தின் பிரதிபலிப்புக்களாக ஐ.நாவுக்கான அந்நாட்டின் நிரந்த வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் அவர்களின் விஜயத்தையும் அவர் யாழ்ஃஒஸ்மானியாக் கல்லூரி மாணவிகளோடு இணைந்து நடன மாடித்; தனது அபாரமான அமெரிக்க இராஜ்ஜியப் பவரைக் காட்டிச் சென்றதையுங் குறிப்பிடலாம். அதன்பின்னர் அந்நாட்டின் இராஜாங்க ஆலோசகரும் இலங்கைக்கு விஜயம் செய்து இங்குவாழும் தமிழ் மக்கள் தொடர்பில் புளுகையும், புரளியை யும் கிளப்பிவிட்டுச் சென்றிருந்தார். தற்போது இவ்வமெரிக்கப் பிரதி நிதிகளின் வரிசைக்கிரமமான இலங்கை விஜயத்தின் ஓர் அங்கமாக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலா ளர் கலாநிதி அமி சீரைட் அவர்களும் 18.12.2015இல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அன்னாரின் இவ்விஜயம் உட்பட அமெரிக்க இராஜ்ஜியப் பிரதி நிதிகளின் இலங்கைக்கான விஜயம் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகரித்துமுள்ளது. இந்த அதிகரிப்பு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்திலிருந்ததைவிடவும் அதிகரித்திருப்பதற்கு ராஜபக்ஷ அவர்களின் சீன சார்புப் போக்கும், ரணில் அவர்களுடைய அமெரிக்க சார்புப் போக்குமே காரண மாகவிருந்தபோதுங்கூட இலங்கை இனப்பிரச்சினையின் பாலான ஆயுதப்போராட்டத்தின் தோல்வியின் பின்னர் அவ்வினநெருக்கடியைச் சாதகமாகக்கொண்டு முழுத்தீவையும் தனது புதிய உலக மயமாக்கல் என்னும் கோரப்பசிக்குத் தீனியாக்க அமெரிக்க வல்லாதிக்கவாதிகள் முனைந்து நிற்பதன் ஓர் அங்கமாகவே அமெரிக்க சார்பு ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சி அதிகாரத்தைத் தமது இந்நோக்கத்துக்குக் கச்சிதமாகப் பயன்படுத்தித் தனது பிரதிநிதி களை அடுக்கடுக்காக அந்நாடானது அனுப்பிக்கொண்டுமிருக்கின்றது. இவ் வேகாதிபத்திய அமெரிக்காவுக்கு இன்னுமொரு சாதகமான வாய்ப்பாக அமைந்திருப்பது சம்பந்தன், விஜயகலா, சுவாமிநாதன், மனோகணேசன், ரவூப் ஹக்கீம் முதலானோரின் ஐ.தே.க நலனும், அமெரிக்க சார்பு சுபாவமும் எனில் அது தவறன்று.
எனவே ஐ.தே.கவின் ஆட்சி அதிகாரமானது அமெரிக்க அரச பிரதிநிதிகளுக்கு இலங்கையில் இராஜபாடை விரிப்பதும், அப்பாடை மீது வீறுநடைபோட்டுச் சிறுபான்மையினங்களின் தலை வர்களெனப் பலராலும் தெளிவற்று விமர்சிக்கப்படுபவர்களான ஸ்ரீலங்கா தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் அவர்களும், வடக்கின் அமைச்சர்களான டி.டிம்.சுவாமிநா தன், திருமதி.விஜயகலா, மகேஸ்வரன் ஆகியோரும், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்ற அசாதாரண மான கபடி வீரர்களும் அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகளுடன் கூடிக்குலவி மகிழ்வதையும் நோக்கின் இந்நிலையானது தொடர்ந்தும் நீடித்துச் செல்லுமாயின் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் மீது இறுகப் பற்றிப்பிடித்துள்ள அடிமைச் சங்கிலியானது இனி ஒருபோதும் அகற்றமுடியாதளவுக்கு இறுக்கமடைவதுடன் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலொன்றான வியட்நாமை எவ்வாறு அமெரிக்காவானது கபளீகரஞ் செய்ததோ அதைவிடத் தனது புதிய உலகமயமாக்கல் என்னும் கோரப்பசிக்கு இயைந்ததாக இந்து சமுத்திரத்தின் முத்தெனப் பெருமையுடன் வர்ணிக்கப்படுகின்ற மாம்பழத்தீவை அதன் விதை, தோல் என்பவையுட்பட முழுமையாக சுவைத்து மகிழுமென்பதில் எள்ளளவும் ஐயமுமில்லை.
மேலும் இதுவரையில் விஜயம் செய்தவர்களுக்குள் இறுதி நிலையிலுள்ள அமெரிக்கப் பிரதிநிதி இலங்கையின் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதிகளையுஞ் சத்தித்துள்ளார்.
இப்பிரதிநிதி அமெரிக்காவினுடைய பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச்செயலாளராகவுங் கடமையாற்றுகின்றமையால் அன் னாரின் படைத் தளபதிகளுடனான சந்திப்பும் அச்சந்திப்பின்போது அவரால் பரிமாறப்பட்ட ஸ்ரீலங்காப் படைவீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தனது நாட்டில் பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்பான விடயமும் எவ்வாறான பெறுபேறுகளைத் தோற்றுவிக்குமென்பதையும் நாட்டு நல னிலும், தமிழ் மக்களின் அரசியல் உரி மைகள் தொடர்பிலும் அக்கறையுள்ள சகலரினதும் உடனடி அறவழி அமைந்த சுட்டிக்காட்டலாகவும் இருக்கவேண்டும்.
ஸ்ரீலங்காவின் படைவீரர்களுக்கும், படை அதிகாரிகளுக்கும் தனது தேசத்தில் பயிற்சியளிப்பது தொடர்பில் பிரஸ்தாபித்த மேற்படி அமெரிக்கப் பிரதிநிதியான கலாநிதி அமி சீரைட் அவர்களின் கூற்று நிதர்சனமாக்கப்படுமானால் இலங்கைத் தமிழினத்தின் விடுதலைக்காக என்றைக்குமே எவருமே போராடமுடி யாத அவலநிலை உருவாகுவதோடு தொழிலாளர் விமோசனத்துக்கான போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலையே தோன்றும். மேலும் தமிழ் இளையோரைப் பயங்கரவாதிகள் எனப் பொருளற்று விமர்சனஞ் செய்து அவர்களைத் தொடர்ந்தும் வேட்டையாடுவதற்கும் தொழிலாளர் விமோசனந் தொடர்பிலான போரா ளிகளையும் அவ்வாறே அரசா னது பூண்டோடு நசுக்குவதற்கும் வழிவகுக்கும்.
ஆகவே அமி சீரைட் அவர்களுடைய மேற்படி திட்டத்திலுள்ள ஆபத்தைப் புதிய தமிழர் தலைவரும் மேதகு எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்களும் மாண்புமிகு வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும், மாண்புமிகு அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், திருமதி.மகேஸ்வரன், மனோ கணேசன் ஆகியோரும் கௌரவ.முஜிபர் ரஹ்மான் போன்ற ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொண்டு அம்பலப்படுத்த வேண்டுமென்னும் ஆதங்கம் சிந்திக்கத் தெரிந்த சகலரிடமுள்ளபோதும், அவர்கள் ஒருபோதும் அம்பலப்படுத்த முன்வரமாட்டார்களென்பதே பேருண் மையாகும். ஏனெனில் அவர்கள் தமதும் தமது வர்க்கத்தினரதும் சர்வதேசியளவிலான பொருளியல் தேவைகளுக்குத் தம்மை என்றைக்கோ சோற்றுப் பிண்டங்களாக்கியுள்ள கனவான்களாவார்கள்.
இப்பிரதிநிதிகளின் வருகையோடு மட்டும் நின்றுவிடாமல் 20.12.2015 அதி காலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன் அமெரிக்கத் திணைக்களத்தின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கான நான்காவது பயணமாகக் கொழும்பை வந்தடைந்திருக்கின்றார். அன் னாரினால் எடுத்துவரப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி அவர்களின் சிறப்புச் செய்தி எதுவாகவிருந்தாலுங்கூட அது இலங்கைக்கோ அல்லது இலங்கைத் தமிழ் மக்களுக்கோ நன்மையளிக்கக் கூடியவொன்றாகவிருக்குமென்பது அசாத்தியமானதே.
இலங்கை வந்துள்ள நிஷா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகிய முன்னிய அரச உயர்மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தியுமுள்ளார்.
முற்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில் தொடர்ச்சியான அமெரிக்கப் பிரதிநிதிகளின் இலங்கை வருகை யின் ஒரு பிரதான அங்கமாக மேற்படி அமெரிக்கப் பிரதிநிதி நான்காவது முறை யாக ஜனாதிபதி ஒபாமா அவர்களின் சிறப்புச் செய்தியுடன் இலங்கைக்கு வருகை தந்திருப்பது ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையரசு மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் அது தொடர்பில் அமெரிக்கப்பிரதிநிதி இலங்கை ஜனாதிபதி மைத்திரி, பிர தமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோ ரிடம் கேள்வியெழுப்புவாரெனக் கூறப்படுகின்றபோதும் அவ்வாறு அவர் கேள்வியெழுப்பினாலுங்கூட அக்கேள்வியானது இலங்கைத் தமிழ் மக்களின் விமோசனந் தொடர்பில் பூச்சியத்தன்மைவாய்ந்தவொன்றாகவே இருக்குமென்னும் பேருண்மையை இடித்துரைத்து அமெரிக்காவின் இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் வேட்டைக்காடாக விளங்கிய வியட்நாமைப் போன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முத்து எனப் பெருமையு டன் விபரிக்கப்படும் மாம்பழத் தீவான இலங்கையும் அந்த ஏகாதிபத்திய வல்லரசின் வேட்டைக்காடாக விளங்கும் சாபக்கேட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டுமென மீண்டும் ஒருமுறை தேசபக்தர்களையும் தமிழ் உணர்வாளர்களையும் அறைகூவி அழைக்கின்றோம்.
எனவே அமெரிக்காவின் இக்கபளீகர எத்தனங்கள் நாட்டைப் பெருமளவில் ஆட்கொண்டிருக்கின்ற அவலஞ் சூழ்ந்த இந்நிலையில் மேற்றரப்பட்ட தரப்புக்களும் ஐ.தே.க ஆட்சியதிகாரமும் அமெரிக்காவின் கபளீகர முன் முயற்சிகளுக்கு அனுசரணையாக விளங்கிக் காட்டிக்கொடுப்பவையாக விளங்குமேயொழிய ஒருபோதும் தடுத்து நிறுத்தமாட்டா.
ஆகையால் அமெரிக்காவின் இலங்கை மீதான தற்போதைய அடாவடிகளைத் தடுத்து நிறுத்தத் தேசத்தின் அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து சகல மக்கள் குழுமங்களையும் உள்ளடக்கிய வெகுஜனப் போராட்டங்களை இலங்கை முழுவதும் தொடர்;ச்சியான அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையை எதிர்த்து முன்னெடுக்க உடன் முன்வரவேண்டும். மேலும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலய முன்றலில் பேரணி நகர்த்தி அத்தேசத்தின் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சூழ்ச்சி வலையைக் கிழித்தெறிந்து தேசத்தையும், தேசத்தில வதியும் சிறுபான்மையினங்களையும் ஒருசேரப் பாதுகாப்பதற்குத் திரள் திரளாகத் திரளவும் வேண்டும்.
வீரப்பதி விநோதன்