எருக்கலம்பிட்டி இறால் பண்ணை உடனடியாக அகற்றப்பட வேண்டும்

296

எருக்கலம்பிட்டி கல்லடி கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார், எருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இறால் பண்ணையினால் தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் கடலேறியினை குறுக்காக மறித்து சுமார் 3 கிலோ மீற்றர் பரப்பளவுடையதாக இந்த இறால் பண்ணையானது அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அப்பகுதியில் கடல் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.

குறித்த இறால் பண்ணையானது அரசியல் வாதிகளின் ஆதரவுடன் இயங்கி வருகின்றது எனவும், இதனை அகற்றுமாறு உரிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்திருந்த போதும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் 400 மீனவ குடும்பங்கள் கடற்தொழிலில் ஈடுபடும் பகுதி இறால் பண்ணையாக மாற்றப்பட்டுள்ளமையினால் மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

கடலை பாதுகாக்கின்ற கண்ணாப்பற்றையாக காணப்பட்ட காட்டினை அழித்தே இந்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த பண்ணைப்பகுதிக்கு வரும் மீனவர்களை பண்ணையில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாகவும், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் பின்னணி பலத்துடன் குறித்த இறால்பண்ணையினை நடத்திக் கொண்டு வருவதனால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை என கிராம மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதி கேட்கும் சந்தர்ப்பங்களில் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றது. மேலும் நாளுக்கு நாள் கடல் எல்லையும் இறால் பண்ணைக்காக விஸ்தரிக்கப்படுகின்றது.

இதனால், தற்போது மீனவர்கள் படகு கட்டுவதற்கு இடப் பற்றாக்குறை போன்ற பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், பல வருடங்களாக கடற்தொழில் செய்து குறித்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ். மெராண்டவிடம் வினவிய போது,

“மீனவர்களின் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குறித்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறால் பண்ணை அமைப்பதாக இருந்தால் கடற்தொழில் திணைக்களத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அனுமதி எவையும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் குறித்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.மெராண்டவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

e2-1-300x225

SHARE