எலிசபெத் மகாராணியார் குறித்து கமல்ஹாசன்

343
பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியார் முடிசூடி 63 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, பிரபல தொலைக்காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக கமல் தொடங்கிய ‘மருதநாயகம்’ படத்தின் தொடக்கவிழாவிற்கு எலிசபெத் மகாராணி நேரடியாக கலந்துகொண்டார். இந்த அனுபவம் குறித்து கமல் கூறியதாவது:-

எலிசபெத் மகாராணியை பற்றி எனது மகள் ஸ்ருதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் ‘அந்த ஆன்ட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’. அவர்கள் பிடியில் இருந்த ஒரு நாடு, சுதந்திரமடைந்து, அதற்கு பிறகு ஒரு சாதாரண பிரதிநிதியைப் போல இங்கு நடமாடுவதும், ஒரு குழந்தையின் மனதில் அந்த பிரதிபலிப்பை ஏற்படுத்துவதும் அது தனி மனித சாதனை என்று நினைக்கிறேன்.

நிலை உணர்ந்து, உலகின் மாற்றங்களை உணர்ந்து, தம்மையும் மாற்றிக் கொண்ட ஒரு அரச குடும்பமாக நான் நினைக்கிறேன். அதற்கு முன்னோடியாக இருப்பவர்களில் இவர்களையும், ஜப்பானிய குடும்பத்தையும் ஒரு உதாரண புருஷர்களாக சொல்லலாம்.

தமிழனுக்கு அதுவும் முதல் சுதந்திர போராட்டத்தின் விதையிட்ட, சரித்திரத்தில் இந்தியர்களே மறந்து போன ஒருவன் மருதநாயகம் (முகமது யூசுப் கான்).

இந்த சுதந்திர போராட்ட வீரனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, அப்போதும் கிடைக்கவில்லை. பிறகும் கிடைக்கவில்லை. அதை இந்த படத்தின் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். சுதந்திர போராட்டத்திற்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். அவர் தூக்கிலிடப்பட்ட தேதி 1764 அக்டோபர் 13. ராணியார் இங்கு வந்ததும் கிட்டத்தட்ட அதே தேதியில்தான். அது எனக்கு வியப்பாகவும் இருந்தது.

மருதநாயகம் தன்னுடைய சுதந்திர குரலை உயர்த்தி பேசிய வசனம் அன்று ராணியார் முன்னால் பேசிக் காட்டப்பட்டது. என்னப் பேசிக் காட்டப் போகிறோம் என்பதற்கான மொழி பெயர்ப்பும் அவர்கள் கையில் கொடுக்கப்பட்டது. காலத்தின் மாற்றமும், மனிதனின் முன்னேற்றத்தையும் புரிந்துகொண்ட அவர், மிக எளிமையாகவும், மிகவும் பரந்த போக்குடன் இந்த வசனங்களை இருந்து கேட்டுக் கொண்டதே ஒரு மிகப்பெரிய வெற்றி. இவ்வாறு கமல் கூறினார்.

SHARE