ஏங்கி ஓடும் பசுக்களை காப்பாற்ற யாரும் இல்லையோ!

295
cow_herd
தாய்க்கு அடுத்தபடியாக பசுவை போற்றும் மரபு தமிழ் மக்களுடையது. பாலைப் பொழிந்து தரும் பசுவை தாயாகப் போற்றுகின்ற தமிழ் இனத்தில் இன்று மாட்டிறைச்சிக் கடைகளுக்கு குறைவே இல்லை.

இத்தகைய அபத்தமான நிலைமை எதிலும் கவனமற்ற சைவத் தமிழர்களால் ஏற்பட்டதுதான். ஆமையை இறைச்சிக்கு வெட்டினால் அது கடும் குற்றம்.

கெளதம புத்தபிரானின் ஒரு அவதாரம் என்ற அடிப்படையில் ஆமைக்குப் பாதுகாப்பு. அதேபோல் பன்றி இறைச்சிக் கடைக்கு அனுமதியே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு ஒவ்வாது என்பதால் பன்றி இறைச்சிக்கு தடைவிதிப்பு.

ஆனால் சைவத் தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் பசுவை வெட்டினால் யார் கேட்பது? அதனால் சிவபூமி என்று போற்றப்படும் யாழ்ப்பாண மண்ணில் மாட்டிறைச்சிக் கடைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தக் கொடுமைக்கு எதிராக என்று கண்டனங்கள் எழுகின்றனவோ அன்றுதான் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இது ஒருபுறம் இருக்க, தீவக மண்ணில் இருக்கக் கூடிய கட்டாக்காலி மாடுகளை சட்டவிரோதமாக வெட்டுகின்ற நெட்டூரம் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இத்தகைய கொடுஞ் செயலில் கர்ப்பமான பசுக்களும் வெட்டப்படுகின்றன என்பதை அறியும் போது இதயம் கருகிப்போய் விடுகிறது.

இந்த உலகில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக கண்ணீர்விட்டு அழுது தன் துன்பத்தை தெரிவிக்கும் பக்குவம் மாடுகளுக்கு மட்டுமே உண்டு.

தன் கன்றைக் காணவில்லையயன்றால் பசுக்கள் கதறியழும். கன்றைக் காணாத பசுவின் கண்களால் கண்ணீரோடும். இதற்கு கண்ணீர் ஓடி வழிந்த அடையாளமே சாட்சியமாகும்.

இதனால்தான் தன் ஆன்கன்றை இழந்த பசு, மனுநீதி சோழ மன்னனின் அரண்மனை நோக்கிச் சென்று ஆராய்ச்சிமணியை இழுத்தடித்தது.

இச் செய்தியை குறிப்பிட்ட சேக்கிழார் பெருமான் … தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்த இத்தன்மை என்றார்.

மணியை அடித்தது தாய் என்று உயர்வு படுத்திச் சொல்வதற்குள் தமிழர்கள் பசுவை தாயாக – தெய்வமாக போற்றினர் என்பது புரியப்படும்.

தன் கன்றைக் காணாத பசு கண்ணீர் விட்டு அழுவது மட்டுமல்ல; அடிவயிற்றிலிருந்து பெரும்மூச்சு எடுத்து ஏங்கிக் கொள்வதென்பது மிகப்பெரிய துன்பத்தின் வெளிப்பாடு.

அந்தளவிற்கு ஒரு தாயின் அன்பை – பாசத்தை கொண்டு பாலைத்தரும் பசுவை, எருதை தெய்வமாக போற்ற வேண்டிய நாம் அதை துரத்தி துரத்தி வெட்டிச் சரிக்கிறோம் என்றால் இந்த மண்ணில் சைவ அமைப்புகள் இருந்து என்ன பலன்? பசுவதை தடைச் சங்கங்கள் அமைத்தென்ன பலன்?

ஓ அன்புக்குரியவர்களே! தீவகத்தில் பசுக்கள் தங்கள் கன்றுகளோடு ஓடுகின்ற துன்பத்தை ஒரு கணம் பாருங்கள். இன்று யார் கொல்லப்படுவரோ, எந்தக் கன்று தன்தாயைத் தந்தையை இழக்குமோ என்று தெரியாமல் ஓடுகின்ற மாட்டினைக் காக்க யார் உளர்?

நாளும் பொழுதும் நடக்கின்ற பசு நிந்தையின் பாவம் நம்மைச் சும்மாவிடுமா? பொறுப்பான அதிகாரிகளே! சைவசமய அமைப்புகளே பசுவை மாட்டினத்தை வதைப்பதை, கொல்வதை உடன் நிறுத்த வீறுகொண்டு எழுங்கள். உங்களின் எழுச்சி சிவபூமியை பாவத்திலிருந்நு காக்கும். காலம் பிந்தாதீர்கள்.

SHARE