உலகின் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை நோக்கி பயணித்த 29 இளைஞர்கள் மீட்கப்பட்டு நல்வழிப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, காவல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உளவுப்பிரிவில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் மத அடிப்படையில் செயல்பட்டு வரும் அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பிரிவு கொடுக்கும் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதன்மூலம், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை நோக்கி பயணித்த 29 தமிழக இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.