ஐக்கிய நாடுகள் அமைப்புடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது – ராஜித சேனாரட்ன

330

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியின் சில தரப்பினரும் கடும் போக்காளர்களும் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக சில தரப்பினர் பிழையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் எனவும், எனினும் உண்மை அதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட உள்ள தீர்மானம் இலங்கைக்கு சாதகமானதாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நிலைப்பாட்டை விடவும், ரணில் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நடைமுறைச் சாத்தியமான முறையில் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தை அணுகி வருவதனை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
யுத்த குற்றச்செயல் விவகாரத்தில் தற்போதைய புதிய அரசாங்கம் யதார்த்தமான கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நடவடிக்கைகள் காரணமாகவே நாடு இன்று நெருக்கடிகளை நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ உரிய முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முனைப்பு காட்டியிருந்தால், சர்வதேச அழுத்தங்களை தவிர்த்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாத நிலைமை நாட்டில் நீடித்து வரும் நிலைமையை மஹிந்தவே உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என, ராஜித சேனாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE