இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 166,610 ஆகும். அதனை இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11.8 வீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்குள் இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,359,906 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வருட முதல் 8 மாதங்களுக்கு இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,172,465 ஆக பதிவாகியுள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போதும் 16 வீத அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களுக்குள் மேற்கு ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 377,250 முதல் 445,667 வரையான 18.1 வீதமும், கிழக்கு ஆசிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 242,857 முதல் 291,483 வரையான 20 வீதமும், தெற்கு ஆசியா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 280,589 முதல் 320,110 வரையான 14.1 வீதமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 1598.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.