ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தேசத்தின் பிரதிநிதியாக விளங்கும் சமந்தா பவர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார். அவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்கப் போவதாகப் பூச்சாண்டி காட்டியிருப்பதோடு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்குத் தனது நாடு செய்த உதவிக்குப் பதிலீடாக அக்கல்லூரி மாணவிகளோடு இணைந்து நடனமாடியும் களிபேருவகை கொண்டுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஐ.நாவின் வகிபாகம் புதிதான ஒன்றல்ல. இலங்கையில் போர்த்துக்கேசர் வருகைக்கு முன்னர் கண்டி கோட்டை, கரையோரம் ஆகிய சிங்கள இராச்சியங்களைச் சிங்கள மன்னர்களும், யாழ்ப்பாணம், வன்னி என்னும் தமிழ் இராச்சியங்களைத் தமிழ் மன்னர்களும் ஆண்டிருந்தார்கள் என்பதை மிகுந்த பொறுப்புணர்வுடன் உள்வாங்கிக் கடைசியாக இந்நாட்டை ஆண்ட பிரித்தானியா நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றபோது அன்றிருந்த தமிழ்த் தலைவர்கள் தீர்க்கதரிசனத்துடன் தமிழ் மன்னர்களினால் ஆளப்பட்டிருந்த இராச்சியங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை வெளியேறிச் சென்றிருந்த பிரித்தானியரிடமிருந்தே மீளப்பெற்று வருமுன் காத்திருக்கலாம். ஆனால் அத்தலைவர்கள் அவ்வாறாக வருமுன் காக்காததால் இராணி அப்புக்காத்தரான கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம் அவர்கள் தமிழர் உரிமைகாத்து அவ்வினத்தைத் தலைநிமிரவைக்கவேண்டும் என்னும் கருத்தோவியத்தைக் கருவாகக்கொண்டு அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். பின்னாளில் அன்னார் அன்று ஆண்ட சிங்கள அடக்குமுறை அரசாங்கத்திடமிருந்து அமைச்சர்ப் பதவியைப் பெற்றமையோடு பல்வேறு வகையான தகிடுதத்தங்களையும் மேற்கொண்டிருந்தார். அவருடைய இத் தகிடு தத்தங்களையும், வண்ட வாளங்களையும் தமிழ் மக்கள் முன்றலில் அம்பலப்படுத்திய அந்நாளில் அக்கட்சியில் பொன்னம்பலத்துக்கு அடுத்ததாக முன்னணி வகித்த சாமு வேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (அன்னாரும் பொன்னம்பலத்தைப் போலவே இராணி அப்புக்காத்தராக விளங்கினார் என்பது தெரிந்ததே) கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களான கு.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் போன்றவர்களோடு இணைந்து 1949ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சி என்னும் புதியதொரு அரசியல் அணியை ஆரம்பித்தார்.
இவ்வாறாக இவ்விரண்டு இராணி அப்புக்காத்துமாரில், முன்னவரான பொன்னம்பலம் அவர்கள் ஆரம்பத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா சபைவரை மிகவும் வாஞ்சையுடன் காவிச்சென்று தனது அபாரமான சட்ட அறிவையும், அசாதாரணமான ஆங்கிலப் புலமையையும் பறைசாற்றிப் புகழ்பெற்று விளங்கியபோதுங்கூட அன்னாரின் மணித்தியாலக் கணக்கான ஐ.நா ஆங்கில உரையானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த பயன் மொழி நடையில் கூறுவதாயின் ஒன்றுமேயில்லையெனவும், கணிதப்பாணியில் சொல்வதாயின் பூச்சியமேயெனவும், சட்டப் புலமையின்பாற்பட்டு விளம்புவதாயின் நிரந்தரச் சிறைவாசம் எனவுமே கருதப்படவேண்டும் இதேபோல இன்று அமெரிக்கதேசம் சார்ந்த ஐ.நா சபையின் பிரதிநிதியான சமந்தா பவரின் இலங்கை விஜயமும், அவர் வட மாகாண முதலமைச்சரும், இளைப்பாறிய நீதியர சருமான விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்தமையும் முடிவில் இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பூச்சிய நலனையே பெற்றுக்கொடுக்கும் என்னும் பேருண்மையைப் பூகோள அரசியல் நோக்கர்கள் ஒருபோதும் மறுத்துரைக்க முன்வரமாட்டார்கள். முன்வரவும் முடியாது.
இத்தேசத்தின் தமிழ் மக்கள் பிரச்சினையின் பாற்பட்ட ஜி.ஜி அவர்களுடைய ஐ.நாவின் அமெரிக்கையான புலமைக்குக் கிடைத்த பெருந்தோல்வியின் பின்னரும் இன்றைய சட்டப்புலமையாளர் விக்னேஸ்வரன் அவர்கள் அதே ஐ.நா சபையையும் சமந்தா பவரின் பவரையும் (Power) நம்புவது நகைப்புக்கிடமானது.
இதைப்போலவே பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் படுதோல்விக்குப் பின்னரும் தொடர்ந்தும் ஒப்பந்தங்களை நம்பியமையும், இன்றுங்கூட எதிர்க்கட்சித் தலைவராகச் ஸ்ரீலங்கா நடாளுமன்றத்தில் சீர்மிகு பதவியில் களித்திருக்கும் இரா.சம்பந்தன் அவர்கள் சமந்தா பவரின் அனுசரணையுடன் ரணிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுத் தமிழரைக் காக்கப்போவதாக கருத்தற்றுக் கன்னாபின்னா என உளறுவதும் உப்புச் சப்பற்ற வெறும் பித்தலாட்ட அரசியலே யெனலாம்.
இவ்விடத்தில் சமந்தா பவரின் பவர் (Power) யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மாணவிகளோடு இணைந்து ஆடிய ஆட்டத்தோடு முடிந்துவிடுமா? அல்லது அந்தப் பவர் (Power) தொடர்ந்தும் நீடிக்குமா? என வினவவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
உலகம் முழுக்கப் பரந்துவாழும் கிறிஸ்தவ மக்களுக்கெல்லாம் பெரி யவராக விளங்கும் தூயவர், புனிதர், பரிசுத்தர் பாப்பரசருடைய பவரே (Power) நவீன நடனத்தோடேயே முடிந்துவிடும் இன்றைய இருள் சூழ்ந்த நிலையில் சமந்தா பவரின் பவர் (Power) ஒஸ்மானியாக் கல்லூரி மாணவிகளோடு இணைந்து ஆடிய ஆட்டத்தோடேயே அடங்கிவிடுமெனவே நாம் கருதுகின்றோம்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலை வர் சம்பந்தன் அவர்கள் சமந்தா பவரின் பவரைப் (Power) பின்னணியாக வைத்து மைத்திரி-ரணில் அரசுடன் ஒட்டி உறவாடிக் கள்ளக்காதல் புரியுமளவுக்கு முன்னேறிச் சென்றாலுங்கூட ஆச்சரியப்பட முடியாது. ஏற்கனவே சம்பந்தன் அவர்களுக்கு எதிர்பாராமல் கிடைத்துவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியென்னும் இன்ப அதிர்ச்சியினால் வெலவெலத்துப் போய்விட்டநிலையில் ஆகக்குறைந்தது சமஷ்டியையாவது வலியுறுத்தித் தமிழர் காவலர் என்னும் தனது நிலையைப் பாதுகாக்கத் தவறிவிட்டாரென்னும் ஆதங்கம் அவர் மீது வாஞ்சைகொண்ட பலருக்குமுள்ளது. இதனால் தற்போது ஐ.நாவின் அமெரிக்கப் பிரதிநிதியின் வருகையும் அப்பிரதிநிதியினால் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைப்பேன் எனக்கூறப்பட்ட வெறும் மரபுசார் வாய்ஜாலமும் சம்பந்தன் அவர்களின் தற்போதைய இறும்பூதான இருப்பை இறுகவைப்பதற்குப் பயன்படுமேயொழிய தமிழ் மக்களின் விமோசனந் தொடர்பில் எவ்விதத்திலும் ஆக்கபூர்வமான விளைவு களைத் தோற்றுவிக்கமாட்டா.
மாறாக மஹிந்த ஆட்சியைவிட மிகவும் வலுவான அமெரிக்க சார்பு சக்தியாக விளங்கும் மைத்திரி-ரணில் அரசுக்குச் சார்பானதாகவே ஐ.நா அமெரிக்கப் பிரதிநிதியின் வருகை அமைவதோடு அப் பிரதிநிதியால் யாழ்ப்பாணத்தில் தெரிவிக்கப்பட்ட தமிழர் பிரச்சினை தொடர்பிலான உறுதி மொழிகள் பொருளற்ற மோசடியாக விளங்குவதோடு கொழும்பின் மைத்திரி-ரணில் அரசின் தமிழர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியென்னும் போதையினால் உருவான உறைநிலையின் பாற்பட்டுச் சம்பந்தன் அவர்களின் துணைபோதலை மேலும் வலுப்படுத்தி அப்பிரதிநிதி மூலம் அமெரிக்காவானது தானும் தமி ழர் மீதான அடக்குமுறையை மேலும் விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதென்பதே உண்மையாகும்.
இலங்கை இனநெருக்கடி தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே நல்லிணக்கம் என்னும் முகமூடி அணிந்து நயவஞ்சகமாகக் கொழும்பின் தமிழர் மீதான அடக்குமுறையாளர்களோடு ஒன்றிணைந்து அவ்வினத்தின் மீதான அடிமைச் சங்கிலியை இறுக்கி இறும்பூய்தெய்திய அமெரிக்காவானது அவ்வடிமைச் சங்கிலியை ஆயுதங்கள் மூலமாவது உடைத்தெறிவோம் எனப் போர்ப்பரணி பாடிக் கிளர்ந்தெழுந்த வீரமறவர்களைப் பயங்கரவாதிகள் எனவும், அவ்வீர மறவர்களை உள்ளடக்கியிருந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை உலக ளாவியளவிலான பயங்கரவாத இயக்கமெனவும் முத்திரை குத்தி நின்றது. அதுமட்டுமல்ல 1979ஆம் ஆண்டுக்கான இந்நாட்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் தமிழ் ஈழம் என்னும் மிகவும் பொறுப்புணர்வுடன் உள்ளீர்க்கப்படவேண்டிய கோரிக் கையைத் தமிழ் மக்கள் முகதாவில் வைத்துப் போட்டியிட்டு அக் கோரிக்கைக்கான தமிழ் மக்களின் ஆணையைப் பெரிதும் வலுவான நிலை யில் பெற்று நாடாளுமன்றத்துக்குஞ் சென்றமையோடு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்ற ஆசனங்களைவிட அதிகளவு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டதனால் எதிர்க் கட்சியாகவும் தன்னை ஆக்கிக்கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி என்னும் அமைப்பின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை ரணசிங்க பிரமேதாசாவோடு இணைந்து தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு எவ்வாறெல்லாம் அமெரிக்கா பயனப் படுத்தியதோ அவ்வாறே தற்போதும் சம்பந்தன் அவர்களையும் மைத்திரி-ரணில் அரசோடு இணைத்துக் தமிழர் விடுதலைப்போராட்டத்தை அந்நாடானது தனது ஐ.நா சபையின் பிரதிநிதி மூலம் நசுக்க முயல்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் அன்றைய காலகட்டத்தில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தமைபோன்றே இன்றையபோது சம்பந்தன் அவர்களும் எதிர்க்கட்சித் தலை வராக விளங்குகின்றாரென்பதையும் சுட்டிக்காட்டுவதும் பொருத்த முடையதாகவிருக்கும். அத்தோடு அன்றையபோது ஜே.ஆர்.பிரேமதாசா ஐ.தே.க ஆட்சியிலிருந்தமைபோன்றே இன்றையபோதும் மைத்திரி-ரணில் பச்சை அணியினரின் ஆட்சி அமைந்திருக்கின்ற தென்பதையும் குறிப் பிடுவதும் சிந்தனைக்கு விருந்தாக வேயிருக்கும்.
இன்றைய தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா அவையின் அமெரிக்கப் பிரதிநிதியி டம் அவ்வவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தும்படி கோரியிருக்கின்றார். சம்பந்தனுடைய இக்கோரிக்கை மிகவும் பரிதாபகரமானது. அகிலந்தழுவியளவில் அடக்குமுறை, ஒடுக்குமுறை அரசுகளுக்குச் சார்பாக நின்று அடக்கப்படும், ஒடுக்கப்படும் மக்களின் இரத்த வெள்ளத்திலே நீச்சலடித்துத் தனது புதிய உலக மயமாக்கல் என்னும் வெறிபிடித்த ஆக்கிரமிப்புக் கோட்பாட்டுக்கு அம் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தும் அமெரிக்க தேசம் சார்ந்த ஐ.நா பிரதிநிதி இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஐ.நா சபையில் குரலெழுப்பி அப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பார் எனச் சம்பந்தன் எண்ணுவது வெறும் ஏமாளித்தனமேயொழிய வேறல்ல. ஐ.நா அவைமூலம் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதாகக் கூறித், தமிழ் மக்களின் அடிமை வாழ்வு ஆரம்பமான காலப்பகுதியில் அம்மக்களின் தனிப்பெருந்தலைவராக விளங்கித் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என விண்ணதிர முழக்கமிட்டுப் போதாததற்கு ஐ.நா அவை யிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புலமைசார் ஆங்கிலத்தில் மணிக்கனக்காக முழக்கமிட்டு வரலாற்றுப் புகழ் பெற்றார். ஆனால் இன்று சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோர் ஐ.நாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதியிடம் அவர் கொழும்பின் தமிழர் மீதான அடக்குமுறை ஆட்சியாளர்களின் விசுவாசம் மிக்க நண்பர் என்னும் சர்வதேச அரசியலை நன்கு புரிந்துகொண்டிருந்துங்கூட அந்நபரிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்குமாறு மண்டியிட்டு மன்றாடிய மடத்தனத்தைப்போலவே அன்று இராணி அப்புக்காத்தார் பொன்னம்பலம் அவர்களும் ஐ.நாவில் அங்கம் வகித்த கொழும்பின் தமிழர் மீதான அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குச் சார்பான வல்லரசு நாடுகளிடம் தமிழர் உரிமையைத் பெற்றுத்தருமாறு யாசகம் வேண்டி நின்றார். அவருடைய இந்த யாச கம் சட்ட நுணுக்கங்களின் பாற்பட்டும், ஆங்கிலப் புலமையின் பாற்பட்டும் இன்றுங்கூட மட்டுமல்ல என்றுமே அதிமெச்சத்தக்க வொன்றாகவிருந்தபோதுங் கூட அந்த யாசகத்தில் இருந்த அரசி யல் ரீதியான பூச்சியப் பெறுமதியான உள்ளடக்கம் தமிழ் மக்களைத் தலை நிமிர வைப்பதற்குப் பதிலாகத் தலை குனியவே வைத்ததெனலாம்.
அன்னாரின் அப்பாணியைப் பின்பற்றியே இன்று தமிழ் மக்களின் அரசி யல் பிரச்சினையை மையமாக வைத்து விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றோர் கனவான் அரசியலில் ஈடுபட்டு இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டப் பயணத்தில் பிரபாகரன் அவர்களின் முப்பது ஆண்டு கால நகர்வின்போது முற்றுமுழுதாகக் களையப்பட்டிருந்த கறையை அதற்கு முன்னர் இருந்தமை போலக் கறைபடிந்ததாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றார்கள்.
மேலும் இன்றைய கதாநாயகி யான சமந்தா பவர் என்பவர் அமெரிக்க தேசமானது யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் கட்டிக்கொடுத்த விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்துவைத்து அக்கல்லூரி மாணவி களோடு இணைந்து நடனமாடியும் களிபேருவகை கொண்டுள்ளார். நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதைப்போல பரிசுத்த பாப்பரசரையே நவீன நடனக்கலை விட்டு வைக்காதபோது சமந்தா பவரையும் விட்டு வைக்காதது ஆச்சரியத்துக்குரியதொன்றல்ல. எனினும் அன்னாரின் நடனந் தவிர்ந்து தமிழ் மக்கள் தொடர்பில் யாதாவது பயன் கிடைக்குமா? என்பதுதான் ஆய்வாளர்களின் மிகுந்த ஆதங்கமாகவும் உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடை முறைப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள சம்பந்தன் அவர்கள் அத்தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா சபையும் அமெரிக்காவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தனின் இவ்வலியுறுத்தலை ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் ஒரு சில நாடுகள் மட்டும் கரிசனையோடு கருத்துக்கெடுத்தாலும் ஏகாதிபத்திய அமெரிக்காவும், இலங்கையை எப்போது புசித்து ஏப்பம் விடலாமெனக் கழுகுக் கண்களோடு காத்து நிற்கும் மேலாதிக்க வெறிபிடித்த நாடுகளும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாகவென்ன ஒரு பகுதியாக வேனும் நிறைவேற்றப்படுவதற்குத் தமது செல்வாக்கைப் பிரயோகிப்பார்களென்பது பொதுவில் அசாத்தியமானவொன்றே. எனினும் சம்பந்தன் அவர்கள் தான் ஸ்ரீலங்கா தேசத்தின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியை அலங்கரித்து நிற்பதால் தன்னுடைய மாண்புமிகு பதவிக்கு உரிய மதிப்பளித்து இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கவேண்டுமென வலியுறுத்தும் தன்மை வாய்ந்ததாகவே அன்னாரின் சமந்தாவின் பவரை (Power) நாடிய வலியுறுத்தலும் இடம்பெற்றிருக்கின்றது என்னும் ஒப்புவமையால் உண்மையொன்று மறைவிலிருந்து வெளிக்கிளம்பி வெளிச்சத்துக்கு வந்துள்ளதையும் நோக்கக்கூடியதாயிருக்கின்றது. எதிரி கள் ஸ்ரீலங்காவின் அடக்குமுறை ஆட்சியாளர்களாகவிருந்தாலுஞ் சரி, அமெரிக்காவாகவிருந்தாலுஞ் சரி இந்திய நில விஸ்தரிப்புவாதிகளாகவிருந்தாலுஞ் சரி தமிழர்களுக்குத் தாம் அணிந்துள்ள பட்டுப்பீதாம்பரத்தையொத்த ஆடையை வழங்கப்போவதில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்குப் பட்டுப்பீதாம்பரந்தான் தேவைப்படுகின்றதா? என எள்ளிநகையாடி கட்டியிருக்கின்ற கோவணங்களையும் உருவிவிடுவார்களென்பதே யதார்த் தமாகும். ஐ.நா அவையின் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானத்துக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசிய வாதிகளினால் முன்னெடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஏற்படும் கதியே ஏற்படும். ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் சிங்களப் பிரிவினரின் பட்டுப் பீதாம்பரத்தை நாடி நின்றபோது பதிலீடா கச் சிறுபான்மையினரின் கோவணங்கள் மட்டுமாவது உருவப்படாமல் எஞ்சி நின்றன. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் சமாதான வெள்ளைக்கொடிக்கு ஏற்பட்ட நவீன கதியைப்போல தமிழர் மீதான துகிலுரி படலமும் கோவணத்திலிருந்து அம்மணம் அளவுக்கு விருத்தியடைந்துமுள்ளது.
மேலும் சமந்தா பவர் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இனச்சுத்திகரிப்பு எனத் தெளிவற்ற ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார். இக்கருத்துத் தொடர்பிலும் விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றோர் மௌனிகளாக இருப்பது அவர்களின் வர்க்கநலனின் பாற்பட்டு வியப்புக்குரியவொன்றல்ல.
இவ்விணைந்த வர்க்கநலனின் பாற்பட்டே அவ்வமெரிக்கா சார்ந்த ஐ.நா அவையின் பிரதிநிதி இஸ்லாமிய அரசியல் பிரமுகர்களான ஸ்ரீலங்கா முஸ்லீம் லீக்கின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களையும் சந்தித்துமுள்ளார். இவ்விரு இஸ்லாமிய அரசியல் தலைவர்களில் முன்னவர் மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அவ்வரசாங்கத்தில் நீதி அமைச்சர் பதவி வகித்தமைக்கான நன்றிக் கடனாக மஹிந்த தரப்பினர் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்குத் துணைபோனார். இரண்டாமவர் தமிழ் முற்போக்குக்கூட்டணி என்னும் கட்சியை ஏறக்குறைய ஒத்தநிலையில் கபடி ஆடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவராவார். எனவே இவ்விரண்டு நபர்களையும் சந்தித்தமை சமந்தா பவரின் விபரீதமான பவரின் (Power) மேலுமொரு படிக்கல் என்றே கூறவேண்டும். ஆகையால் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதி நிதி சமந்தா பவர் அவர்களின் பவர் (Power) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவிகளோடு இணைந்து ஆடிய நடனத்தோடு மட்டும் நின்றுவிடாமல் மேலும் நீண்டுகொண்டு செல்வது இலங்கை தேசத்துக்கும் சரி அத்தேசத்தின் தமிழ் மக்களுக்குஞ் சரி அகிலத்தின் அனைத்து மனிதம் மறுக்கப்பட்ட அடக்கி ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்ற அபலைகளுக்குஞ் சரி பேராபத்தாகவே முடியுமென நாம் இடித்துரைக்காமல் இருப்பதும் இயல்புக்கு மாறானவொன்றே.
வீரப்பதி விநோதன்