ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

217

 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் வடக்கு முதல்வர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி நோக்கி செல்லும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு யாழ்.பொது நூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகத்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறுகின்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.

இச்சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக அரசியல் அமைப்பில் ஊடாக அரசியல் தீர்வு காணப்படவேண்டும், பொறுப்புக்கூறலில் சர்வதேச தரப்பின் பங்களிப்பின் அவசியம், காணமல்போனோர் பிரச்சினைகள், வடக்கு கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், காணிகள் விவகாரம், அரசியல் கைதிகள், இராணுவ பிரசன்னம், அன்றாடப் பிரச்சினைகள், சமூக, பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்த முக்கிய சந்திப்பை நிறைவு செய்த பின்னர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை ஆளுநர் அலுவலகத்தில் பான் கீ மூன் சந்திக்கவுள்ளார். அவருடன் யுத்தத்தின் பின்னரான வடமாகாண நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பு நிறைவடைந்தவுடன் யாழ்.விஜயத்திற்கான நினைவு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளவிருக்கும் பான் கீ மூன் அதன் பின்னர் வலிகாமத்தில் அமைந்துள்ள நலன்புரி முகாம்களுக்கு நேரடிய விஜயம் செய்யவுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் யாழ்.விஜயத்தின் இறுதி அம்சமாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது உத்தியோக பூர்வ அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் அவசியம், வடமாகாண சபை செயற்பாடுகள், வடமாகாண மக்களின் யதார்த்த நிலைமைகள், மத்திய அரசாங்கத்திற்கும், வடமாகாண சபைக்கும் இடையில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்திப்புடன் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் பிற்பகல் 2.30 மணியளிவில் தனது யாழ்.பயணத்தை நிறைவு செய்துகொண்டு கொழும்பு திரும்பவுள்ளார்.

முன்னதாக 2009ஆம் ஆண்டு 22, 23ஆம் திகதிகளில் யுத்தம் நிறைவடைந்த சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் வடமாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருக்கவில்லை. மாறாக வவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பொதுமக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.banki

SHARE