ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றம் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இலங்கையில் அமுல்படுத்துவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த புதிய அரசியல் சாசனமும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதி உச்ச பட்ச நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் செயற்பட்டு வருவதாகவும், கலப்பு நீதிமன்றங்கள் இலங்கையில் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு இலங்கை விசேட சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்களை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க புதிய சட்டங்கள் பாராளுமன்றின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டங்களின் அடிப்படையில் புதிதாக கொண்டு வரப்படும் சட்டமொன்றின் மூலம் பழைய விவகாரங்களுக்காக தண்டனை விதிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த கால யுத்தக் குற்றச் செயல்களுக்கு புதிய சட்டமொன்றின் மூலம் தண்டனை விதிக்கப்பட முடியாது எனவும் அவ்வாறு தண்டனை விதிக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் கட்சியின் நிலைப்பாடு வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறியளவிலான பிரதிநிதிகளை அழைத்துச்சென்றாலும் பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.