ஐ.நா தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

299

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கட்சிகளிடம் கோரியுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு மாற்றுக் கருத்துக்கள், வித்தியாசமான யோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடவும் இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சாதகமான வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மீளவும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிக்க வேண்டுமென சில தரப்பினர் ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை எதிர்நோக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE