ஐ.பி.எல். தொடரில் 31-வது லீக் ஆட்டத்தில் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் டெல்லி அணி குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என கருதப்படும் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் தலைவர் ஜாகீர் கான் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுமித் (15) மற்றும் மெக்கல்லம் (1) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பின்ச் 5 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதன் பிறகு களமிறங்கிய ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை அமித் மிஸ்ரா பிரித்தார். 24 ஓட்டங்கள் எடுத்திருந்த ரெய்னா ஸ்டெம்பிட் முறையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய கார்திக் 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜடேஜா(36) அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் நதீம் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 150 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லிஅணி, குஜராத் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்தது.
டிகாக் 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுமித் பந்துவீச்சில் கவுஷிக்கிடம் தமது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து 69 ஓட்டங்கள் குவித்த பாண்ட் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். இதனையடுத்து சஞ்சு சாம்ஸன் மற்றும் டுமினி ஆகியோர் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
ஆட்ட நாயகனாக டெல்லி அணியின் பாண்ட் தெரிவு செய்யப்பட்டார்.