ஒடிசாவில் மீண்டும் அரங்கேறிய துயரம் – மகனின் கண் முன்னே தாயை இரண்டாக மடித்து தூக்கிச் சென்ற கொடுமை!!

218

ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தைத் தூக்கிச் செல்ல வாகன வசதியை ஏற்படுத்தித் தராமையினால், தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ஒடிசாவில் மற்றுமொரு சம்பவம் பதிவாகி உள்ளது.

ஒடிசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சடலம் ஒன்றை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல செலவாகும் என்பதால் இடுப்பு பகுதியில் மிதித்து இரண்டாக மடித்து சடலத்தை எடுத்துச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பலசூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோரோ நகரை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற விதவை பெண் கடந்த புதன்கிழமை ரயில் மோதியதில் பலியானார்.

சோரோவில் மருத்துவமனை இல்லாததால் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலசூருக்கு முச்சக்கரவண்டியில் உடலை எடுத்துச் சென்றால் செலவாகும் என்று உயிரிழந்த பாரிக்கின் உடலை உள்ளூர் சுகாதார மைய ஊழியர் ஒருவர் பாரிக்கின் இடுப்பில் ஏறி நின்று உடலை இரண்டாக மடித்துள்ளார்.

அதன் பிறகு இரண்டு ஊழியர்கள் சேர்ந்து பாரிக்கின் உடலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, துணியால் மூட்டை கட்டி இரண்டு தடிகளில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாரிக்கின் மகன் ரபிந்திர பாரிக் செய்வது அறியாது கதறி அழுதார்.

இது குறித்து அறிந்த ஒடிசா மாநில மனித உரிமை ஆணையம் பொலிஸார் மற்றும் பலசூர் மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement
SHARE