ஒருதலை காதலால்தேவாலயத்திற்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை  மீண்டும் ஒரு விபரீதம்!

244

கரூர் கல்லூரியில் ஒரு தலை காதலால் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

கரூர் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி ஒருதலை காதல் விவகாரத்தில், மாணவன் ஒருவனால் வகுப்பறையிலே அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடியில், ஒருதலை காதலால் தேவாலயத்திற்குள் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திரா நகரை சேர்ந்தவர் நியூட்டன் என்பரின் மகள் பிரான்ஸினா(24) . இவர் அதே பகுதியில் உள்ள மழலையர் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவரை தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவன கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த கீகன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அவரின் காதலுக்கு பிரான்ஸினா மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. தவிர, பிரான்ஸினாவுக்கு எதிர்வரும் 8ம் திகதி வேறொருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

இதனால் கீகன் தனது காதலை ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிரான்ஸினாவை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார்.

இந்நிலையில் இன்று கீழ சண்முகபுரத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரான்ஸினா ஜெப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தேவாலயத்திற்குள் புகுந்த கீகன், பிரான்ஸினாவை சரமாரியாக வெட்டினார். இதனால் பிரான்ஸினா ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்தார்.

இதன் பின்னர் உயிருக்கு போராடிய பிரான்ஸினாவை, ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கீகனை தீவிரமாக தேடினர்.

ஆனால் பொலிசுக்கு பயந்து அவர் தூத்துக்குடி மணல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை கொலை செய்து விட்டு பொலிசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE