அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 249 ஓட்டங்கள் பெற்றனர். மெக் பர்லின் 80 பந்துகளில் 136 ஓட்டங்களும், சாவில் 56 பந்துகளில் 120 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்
அடுத்து வந்த பெட்சும், பிரவுனும் தங்கள் அதிரடியை தொடர்ந்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடியும் தங்கள் பங்குக்கு 288 ஓட்டங்கள் குவித்தது.
இறுதியில், நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 596 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பெட்ஸ் 71 பந்துகளில் 124 ஓட்டங்களும், பிரவுன் 84 பந்தில் 117 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். உதிரிகளாக 88 ஓட்டங்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, 597 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு போர்ட் அடிலெய்ட் அணி களமிறங்கியது. ஆனால், நார்த்தெர்ன் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி 25ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது
இதையடுத்து, நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 571 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போர்ட் அடிலெய்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.