நீதிமன்றின் தடையை மீறி ஆலய சூழலில் மிருக பலியால் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாலும் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என மிருக பலியிடுதலுக்கான தடையை நீடித்த நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஆலயத்தில் வேள்வி உற்சவத்தின்போது மிருகங்கள் பலியிடப்படுவது தொடர்பிலான வழக்கு தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை மீறி ஆலய சூழலில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாலும் நிர்வாக சபையினர், ஆலய பூசகர் ஆகியோர் இரண்டு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.
குறித்த தடையை மீறி நிர்வாகம் செயற்பட்டால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலயம் மூடப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
ஆலய வேள்வி உற்சவத்தின் போது, ஆடுகள், கோழிகளை ஆலயத்திற்கு கொண்டு வந்து பூஜை வழிபாடுகளை செய்வதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
அவ்வாறு கொண்டுவரப்படும் ஆடுகளையும் கோழிகளையும் பலியிடுவதற்கு முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது தீர்ப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.