ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகளை கருத்தரித்த மனைவி குழந்தைகளை பிரசவித்து ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட கணவர் கண்ணீர் மல்க 4 குழந்தைகளையும் கையேற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பீனிக்ஸ் நகரைச் சேர்ந்த கார்லஸ் மொராலஸ் என்ற மேற்படி நபரின் மனைவியான எறிக்கா (36 வயது) செயற்கைக் கருத்தரித்தல் மூலம் ஒரே சமயத்தில் 4 குழந்தைகளை கருத்தரித்தார்.
இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக பனர் குட் சமாரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து 3 பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் ஒரே சமயத்தில் பிரசவித்த எறிக்கா, பிரசவத்தின் போதான அதிகளவு குருதி இழப்பு காரணமாக உயிருக்காக போராடிய நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஒரே சமயத்தில் 4 குழந்தைகளை பிரசவிக்கப் போவதையிட்டு பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த எறிக்கா கடைசி வரை தனது குழந்தைகள் எவரையும் கையில் ஏந்தும் பாக்கியத்தை பெறமுடியாது உயிரிழந்தமை தனக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக மொராலஸ் கூறினார்.
இந்நிலையில் அவர் தனது குழந்தைகளில் ஒருவருக்கு தனது மனைவியின் ஞாபகார்த்தமாக எறிக்கா என பெயர் சூட்டியுள்ளார்.
ஏனைய குழந்தைகளுக்கு கார்லொஸ், பெயஸ்லி, திரேசி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தற்போது 4 குழந்தைகளையும் தனித்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள மொராலஸ், குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வகுப்பிற்கு சென்று வருகின்றார்.