ஒலிம்பிக்கில் மறக்கமுடியாத மனிதர்கள்

223

லிம்பிக் போட்டியின் உச்சகட்டமே 100 மீட்டர் ஓட்டம்தான். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் உலகமே முடிவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் போட்டி இது. கடந்த 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் தொடரில் புல்லரிக்க வைக்கும் உச்சகட்ட மோதலுக்கு பென்ஜான்சனும் கார்ல் லீவீசும் தயாராக நின்றனர். உலகின் அதிவேக மனிதர் யார் என அடுத்த 10 விநாடிகளில் தெரிந்து விடும். கனடாவை சேர்ந்த பென் ஜான்சன் 100 மீட்டர் ஓட்டத்தை 9.79 விநாடிகளில் கடக்க, உலகமே வாயை பிளந்தது. ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தை 9.83 விநாடிகளில் கடந்து பென் ஜான்சன் சாதனை படைத்திருந்தார். சொந்த சாதனையை ஜான்சனே மீண்டும் உடைத்தார். இதற்கு முன் எந்த ஒரு கொம்பனும் 100 மீட்டரை இத்தனை அதி வேகத்தில் கடந்தது கிடையாது.

அடுத்த நாளே பென் ஜான்சனுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது மாதிரிகளில் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்’ கலந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக பென் ஜான்சனிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டது. வெள்ளி வென்றிருந்த  அமெரிக்க வீரர் கார்ல் லீவீசுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஒலிம்பிக், சர்வதேச தடகளப் போட்டிகளில்  எத்தனையோ ஊக்க மருந்து விவகாரங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் பென் ஜான்சனிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்து போனது.  ஏனென்றால் அவரது சிறுத்தை போன்ற வேகத்தில் அப்போது உலகம் மயங்கிக் கிடந்தது. உலக ரசிகர்களை அதிர வைத்த ஊக்க மருந்து விவகாரம் இதுதான்.

1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் அயர்லாந்து நீச்சல் வீராங்கனை மிட்செல் ஸ்மித் திடீரென அனைத்து தங்கப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டார். ஒரே ஒலிம்பிக்கில் அயர்லாந்தை சேர்ந்த எந்த வீராங்கனையும் 3 தங்கப்பதக்கங்களை வென்றது கிடையாது. அதற்கு முன் வியன்னாவில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில், மிட்செல், 2 தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1997ம் ஆண்டு செவிலாவில் நடந்த சர்வதேசப் போட்டியிலும் மிட்செல் 2 பதக்கம் வென்றார். ஆனால் 1995ம் ஆண்டுக்கு முன் எந்த ஒரு சர்வதேச நீச்சல் போட்டியிலும் மிட்செல், பதக்கம் வென்றது இல்லை. ஏன், முதல் 25 இடங்களுக்குள் கூட வந்தது கிடையாது.

தரவரிசையில் 90வது இடத்தில்தான் இருந்தார். அதிவேகமான மிட்செல்லின் முன்னேற்றம் ஒலிம்பிக் கவுன்சிலுக்கு எங்கேயோ இடித்தது. 1998ம் ஆண்டு  மிட்செல் சிறுநீர் மாதிரி பரிசோதனைக்குட்படுத்தியதில், ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. மிட்செல் நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கத் தடகள வீராங்கனை மரியான் ஜோன்ஸ் 3 தங்கம் 2 வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்றிருந்தார். 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், 2 தொடர் ஓட்டங்களிலும் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். ஒரே ஒரு ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கங்கள் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற சாதனையையும் மரியான் அப்போது படைத்தார். கடந்த 2007ம் ஆண்டு மரியான் ஜோன்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.  அவரிடம் இருந்து அத்தனை பதக்கங்களும் பறிக்கப்பட்டன. தடகளத்தில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மரியான் கண்ணீர் மல்க ரசிகர்களிடமும் அமெரிக்க மக்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

சைக்கிள் பந்தய வீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங், தொடர்ச்சியாக 7 முறை ‘டூர் டி பிரான்ஸ்’ பட்டத்தை கைப்பற்றியவர். சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்று சைக்கிள் பந்தயத்தில் வெண்கலமும் வென்றிருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. முதலில் ஆம்ஸ்ட்ராங் இதனை மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டார். அவரது’ டூர் டி பிரான்ஸ்’ பட்டம் பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் கவுன்சிலும் பதக்கத்தை பறித்துக் கொண்டது. டைகர் வுட்ஸ் போல், புகழின் உச்சத்தில் இருந்து அதள பாதாளத்தில் விழுந்தவர் ஆம்ஸ்ட்ராங். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து சைக்கிள் பந்தயத்தில் சாதித்துக் காட்டினார். அந்த சாதனை நிலைக்காமல் போனதுதான் சோகத்திலும் சோகம்!

SHARE