ஒலிம்பிக்போட்டியில் பெண்கள்

173

வேலைகளில் மட்டும் அல்ல, ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். உள்ளூர் போட்டிகள் முதல் உலகப் போட்டிகள் வரை முத்திரை பதித்து வருகின்றனர் பெண் வீராங்கனைகள்.

இவ்வாறு பெண்கள், விளையாட்டில் அதிக அளவில் பங்கேற்க ஒலிம்பிக் போட்டி முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆனால், முதன்முதலில் பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் எது தெரியுமா?

முதன்முதலில், ஒலிம்பிக் போட்டி 1896 ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது. இரண்டாவது, ஒலிம்பிக் போட்டி 1900 ம் ஆண்டு பாரிஸில், வெலொட்ரொம் டீ வின்ஸென்ஸ் என்ற ஆடுகளத்தில் நடைபெற்றது. அங்கு மொத்தம் 997 வீரர்கள் பங்கேற்றனர். அதில் 22 பேர் பெண்கள். முதன்முதலில் பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி இதுவே ஆகும். அங்கேதான் துவங்கியது ஒலிம்பிக் போட்டியில் பெண்களின் பங்கேற்பு. அன்று வெறும் 2 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 44 சதவீதமாக உயர்ந்தது.

அந்த ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள், நீச்சல் போட்டி, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், கத்திச் சண்டை, பிரஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் குத்துச்சண்டை, படகு பந்தயம், சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப், உயிர் காத்தல், வில்வித்தை, பளு தூக்குதல், படகோட்டுதல் (துடுப்போடு), டைவிங், தண்ணீர் பந்தாட்டம் (Water Polo). இந்தப் போட்டியில் சற்று வித்தியாசமான விளையாட்டுகளும் நடைபெற்றன. அதில் கிரிக்கெட், மோட்டார் சைக்கிள் பந்தயம், உள் நீச்சல், தடைகளுடன் கூடிய 200 மீட்டர் நீச்சல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் புதிதாகவே இருந்தன.

அந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 22 பெண்கள், 5 போட்டிகளில் பங்கேற்றார்கள். அதில், ஹிலேனி டி பௌர்டேல்ஸ்  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெயரை பெற்றார். இவர் அந்த பதக்கத்தை படகோட்டும் போட்டிக்காக பெற்றார். ஆனால், முதன்முதலில் தனியாக பங்கேற்று பதக்கம் வென்ற பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றவர்,டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற சார்லொட்டெ கூப்பர். பின், அவர் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வென்றார். அந்த ஆண்டு பங்கேற்ற எவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படவில்லை. பதக்கங்களுக்கு பதிலாக கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த ஒலிம்பிக்கில் மற்றொருவரும் சாதனை படைத்துள்ளார். அல்வின் க்ரேன்ஸ்லென் 60 மீட்டர், 110 மீட்டர், 200 மீட்டர் ஆகிய தூரத்திற்கான தடைகளை தாண்டும் போட்டிகளிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் தங்கம் வென்று, ஒரு ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்கள் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். அது மட்டும் அல்ல, 60 மீட்டர் தடைகள் தாண்டும் போட்டியில் பதக்கம் வென்ற இருவரில் ஒருவர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றார். இந்தப் போட்டியில் நடந்த சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், நீளம் தாண்டுதல் போட்டியில் இவர் வென்றதற்காக மேயெர் ப்ரின்ஸ்டெய்ன் என்ற சக வீரர் இவரது முகத்திலேயே குத்தினார்.

2008 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் வரை பெண்களுக்காக அனைத்து போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், 2012 ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டையை இணைத்த பிறகு, ஆண்களுக்கு சமமாக அனைத்துப் போட்டிகளும் பெண்களுக்கும் நடத்தப்பட்டன. இன்னும் ஒரு சுவராஸ்யமான தகவல் என்னவென்றால், 1991 ம் ஆண்டிற்கு பிறகு ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட அனைத்து போட்டிகளும் பெண்களுக்கும் சேர்ந்தே நடத்தப்பட்டன.

– சு.முரளி

SHARE