ஒலிம்பிக்: இன்று களமிறங்குகிறார் தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம்!

183

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் இன்று களமிறங்குகிறார். இவருடைய போட்டி, மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆடவர் பிரிவில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கம், 77 கிலோ கிலோ எடைப்பிரிவில் இன்று களமிறங்குகிறார். கடந்த ஏப்ரலில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.

தென்னக ரயில்வேயில் 2011 முதல் ராயபுரம் ரயில் நிலையத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சிவலிங்கம். முன்னாள் படைவீரர் ஆவார். தற்போது விஐடியில் பாதுகாவலர் பணியில் உள்ளார். தாயார் தெய்வானை. சதீஷின் இளைய சகோதரர் பிரதீப்குமார்.

2007ம் ஆண்டு முதல் பளுதூக்கும் பயிற்சியை சதீஷ் மேற்கொண்டுள்ளார். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார். பள்ளிப் பருவத்தில் இருந்து தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை சதீஷ் வென்றுள்ளார். 2012ல் மலேசியாவில் நடந்த போட்டியிலும், 2013இல் கஜகஸ்தானில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்றார். பிறகு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்னாட்ச் முறையில் 149 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 179 கிலோ எடையும் தூக்கி சாதனை படைத்தார்.

இவருக்குப் பயிற்சி அளித்த முந்தைய பயிற்சியாளர் எம்.வேலு, காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். தற்போதைய பயிற்சியாளர் முத்து, அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE