போலந்து நாட்டைச் சேர்ந்த ஒடிலியா, நீச்சல் வீராங்கனை. 1994-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார். “நான் எத்தனைத் தங்கப் பதக்கங்கள் வென்றாலும் அவற்றை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிடுவேன்” என்று அறிவித்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். போலந்து நாட்டின் முதல் தங்கம் வென்ற நீச்சல் வீரர் இவர். ஆனால், தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுக்காக வழங்கிவிட்டார். “பதக்கத்தை வைத்து என் சாதனையை நினைவுகூர வேண்டிய அவசியம் இல்லை. நான் ஒலிம்பிக் சாம்பியன் என்ற பட்டமே என் மனதில் நிறைந்திருக்கிறது!’’ என்கிறார் ஒடிலியா.
அந்தோனி இர்வின்
அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே 19 வயதில் தங்கத்தைப் பெற்று சாதனை படைத்தார். 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அந்தோனியைப் பாதித்தது. தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்று, அந்தப் பணத்தை இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.
விளாடிமிர் க்லிட்ஸ்கோ
உக்ரைன் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டது. விளாடிமிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அந்தப் பதக்கத்தை உடனடியாக ஏலம் விட்டார். கிடைத்த பணத்தை உக்ரைன் நாட்டுக் குழந்தைகள் விளையாட்டுகளில் பயிற்சி எடுத்துக்கொள்ள கொடுத்துவிட்டார். “என்னுடைய பதக்கத்தைவிட, எங்கள் நாட்டுக் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பது மிக முக்கியம். இந்தப் பதக்கத்தால் கிடைத்த பணத்தின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை உக்ரைன் நாடு பெறும்” என்றார் விளாடிமிர்.
மார்க் வெல்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் வெல்ஸ், ஐஸ் ஹாக்கி வீரர். 1980-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவரது அணி தங்கப் பதக்கம் வென்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை மிகவும் உயர்வாகக் கருதினார் மார்க். மரபணுக் குறைபாட்டின் காரணமாக மார்க்கின் முதுகுத் தண்டு சேதமடைந்தது. மருத்துவத்துக்கு ஏராளமாகச் செலவானது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், 20 ஆண்டுகளாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்த தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு தன்னுடைய மருத்துவத்தைச் செய்து வருகிறார்.
தங்களின் உழைப்பில் கிடைத்த, தாங்கள் உயர்வாக மதிக்கும் தங்கப் பதக்கங்களை நல்ல காரியங்களுக்காக விற்பனை செய்த, இந்த வீரர்கள் வரலாற்றில் கூடுதல் மதிப்பைப் பெற்றிருப்பார்கள் இல்லையா?