ஒலிம்பிக் போராளி

600

 ஆண்களுக்கான மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப் பதக்கம் வென்றார். எல்லைக் கோட்டைத் தொடுவதற்குச் சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார். பதக்கம் வாங்கும்போதும் அதே சைகையைச் செய்தார். எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களின் போராட்டம் உலகின் கவனத்துக்கு வரவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஃபெயிசா. ‘‘எங்கள் நாட்டில் மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஒரோமோ பழங்குடி மக்களின் நிலங்களை அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டு, வேறு இடங்களுக்குச் செல்ல வற்புறுத்தி வருகிறது. தங்கள் நிலங்களை விட்டுச் செல்ல மாட்டோம் என்று பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கையில் இறங்கினேன். நான் எத்தியோப்பியா சென்றவுடன் கொல்லப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்.

மிக மோசமான நாடாக மாறிவிட்டது எங்கள் எத்தியோப்பியா. ஒருவேளை நான் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தாலும் சுதந்திரம் இல்லாத மக்களுக்காகப் போராடவே செய்வேன். ஒரோமோ மக்கள் எங்கள் பழங்குடியினர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் அமைதிக்காகவும் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் போராடுவதும் என் கடமை என்று நினைக்கிறேன்’’ என்கிறார் ஃபெயிசா லிலேசா.

மிகச் சிறந்த மனிதராகவும் உயர்ந்து நிற்கிறீர்கள் ஃபெயிசா.

இங்கிலாந்தில் வசிக்கும் சிமோன் ஜோன்ஸ் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, சொந்தமாகத் தொழில் செய்து வந்தார். திடீரென்று தொழில் நலிவடைந்தது. அவரது காதலியும் பிரிந்து சென்றார். அடுத்த வேளை உணவுக்குக் கூட அவரிடம் பணமில்லை. தங்குவதற்கு வீடு இல்லை. ‘‘உலகமே இருண்டது போலிருந்தது. அப்போதுதான் டெர்மினல் திரைப்படம் என் நினைவுக்கு வந்தது. டாம் ஹான்க்ஸ் விமான நிலையத்திலேயே தங்கியிருப்பார். நானும் அதேபோல விமான நிலையத்தில் தங்க முடிவு செய்தேன். என்னுடைய உண்மையான அடையாளங்களை மறைத்து, போலியான அடையாளங்களுடன் விமான நிலையத்தில் நுழைந்தேன். இரண்டு நாட்களைக் கழிப்பதற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தேன். ஆனால் விமான நிலையத்தில் நான் எதிர்பார்த்ததை விடவும் வசதிகள் கிடைத்தன.

ஓய்வெடுக்கும் அறை, குளியலறை, இலவச இணைய வசதி, பயணிகள் கொடுக்கும் உணவுகள், காபி என்று வாழ்க்கை எளிதாக நகர்கிறது. அதனால் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நல்ல வேலை கிடைக்கும் வரை இங்கேயே தங்கிக்கொள்வது என்று முடிவு செய்தேன். இங்கே வந்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை செலவு செய்யும் சூழல் ஏற்படவில்லை. அதே நேரத்தில் இந்த விமான நிலையத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை, காவலர்களும் இல்லை. தீவிரவாதிகள் எளிதில் நுழையும் ஆபத்து இருக்கிறது’’ என்று வருந்துகிறார் ஜோன்ஸ். ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள், ‘வீடற்றவர்கள் இப்படி விமான நிலையங்களில் தங்குவது சகஜம்தான். எங்கள் ஊழியர்கள் இவர்களைப் போன்றவர்களுக்குச் சேவை நோக்கில் வேண்டியதை வழங்கி வருகிறார்கள். பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்’ என்கிறார்கள்.

பாதுகாப்பு அதிகரித்திருந்தால் நீங்களே தங்கியிருக்க முடியாது ஜோன்ஸ்.

masala___2984038f

SHARE