வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் வழங்கப்படவுள்ள 900 கோடி ரூபாய் நிதியில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் வடமாகாணசபையின் 62 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மத்திய சுகாதார அமைச்சரை 3 மாதங்களுக்கு ஒரு தடவை சந்திப்பது வழக்கம்.
இந்த சந்திப்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் சுமார் 60 மில்லியன் யூரோ மென்கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், எமது மாகாணத்தின் தேவைகள் தொடர்பான எழுத்து மூல கோரிக்கை ஒன்றை மத்திய சுகாதார அமைச்சுக்கு சமர்பித்தேன்.
அதற்கமைய ஒஸ்திரிய நாட்டின் நிதியை எமக்கு வழங்க ஒப்புதல் காணப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 12ம் திகதி 3ம் கட்டமாக ஒஸ்திரிய நாட்டின் குறித்த நிதி வழங்குனர்கள் வடமாகாணத்திற்கு வந்து பேசியிருக்கின்றார்கள்.
அதற்கமைய 5 மாவட்டங்களிலும் செய்யப்படவேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பான உத்தேச செயற்றிட்டத்தை சமர்பித்திருக்கின்றோம். ஆனால் இறுதியான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
இதன்படி யாழ்ப்பாணம்- பருத்துறை வைத்தியசாலை நவீன வைத்திய வசதிகள் செய்யப்படவுள்ளது, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான விசேட வைத்திய சேவையும், முல்லைத்தீவு மாகாணத்தில் 42 ஆயிரம் விசேட தேவையுடையோர் உள்ளனர். அவர்களை கருத்தில் கொண்டு மாங்குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலையும் அமைக்கப்படவுள்ளது.
மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை மற்றும் சிறுநீரக சத்திர சிகிச்சையும், மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் புதிய சத்திர சிகிச்சை பிரிவும் அதனோடு இணைந்த பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளது. என்றவாறான செயற்திட்டத்தை வழங்கியுள்ளோம்.
இப்போதைக்கு நாங்கள் செயற்திட்டத்தையே வழங்கியுள்ளோம், இறுதியாக எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. நிதி எமது கைகளுக்கும் வரவும் இல்லை. மேலும் கிடைக்கும் நிதி மூலம் 5 மாவட்டங்களுக்கும் சமமாக பிரிக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.