தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்குப் பின் நிறுவும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முன்வைக்கும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு சீனா நிதி உதவி வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இவ்வாறு நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்குப் பணம் வழங்குமாறு சீனாவிடம் கோருமாறு அவர் சிங்கள ஊடகமொன்றிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தரப்புடனும் இரகசிய தொடர்புகளைப் பேணவில்லை எனவும், வெளிப்படையாகவே தாம் தொடர்புகளைப் பேணி வந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் – “நான் ஜனநாயகத்துக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றோம். மேற்குலக நாடுகள் எமக்கு ஜனநாயகம் பற்றிக் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
வடக்கில் எமக்கு வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவினோம். வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கமாட்டார்கள் எனத் தெரிந்தும், வடக்கு மாகாணசபையை நிறுவி தேர்தல் நடத்தினோம் – என்றார்.