ஜேர்மனி நாட்டில் அதிவேகமாக ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து அகதி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று காலை முனிச் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது.
ஹார் என்ற நகரை ரயில் அடைந்தபோது, ரயிலில் பொலிசார் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது, எகிப்து நாட்டை சேர்ந்த 17 வயதான வாலிபர் ஒருவர் பொலிசாரிடமிருந்து தப்பிக்க இருக்கைக்கு கீழே படுத்து ஒளிந்துள்ளார். ஆனால், பொலிசார் அவரை பிடித்து வெளியே இழுத்து சோதனை செய்துள்ளனர். அவரிடமிருந்த ஆவணங்களை பார்த்தபோது அவர் ஆஸ்திரியாவில் அகதியாக குடியேறியது தெரியவந்தது. மேலும், சில காரணங்களால் ஆஸ்திரியா அரசு அவரை இத்தாலி நாட்டுக்கு நாடுகடத்த உத்தரவிட்டுள்ளதும் அந்த ஆவணத்தில் தெரியவந்தது. எனினும், ஆஸ்திரியாவில் இருந்து தப்பி ஜேர்மனியில் சட்டவிரோதமாக குடியேறி முயற்சி செய்து வந்துள்ளார். இவற்றை அனைத்தையும் கண்டுபிடித்த பொலிசார் அந்த வாலிபரை அதே பெட்டியில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். ‘பொலிசாரிடம் சிக்காமல் அடுத்த பெட்டிக்கு தாவி சென்றுவிட வேண்டும்’ என தீர்மானித்த அந்த வாலிபர் சன்னல் வழியாக குதித்துள்ளார். ஆனால், அப்போது ரயில் அதிவேகமாக சென்றுக்கொண்டு இருந்ததால் தண்டவாளத்திற்கு அருகே இருந்த இரும்பு கம்பம் மீது மோதி உடல் சிதைந்து பலியானார். இந்த வாலிபர் ஜேர்மனியில் குடியேறுவதற்காக பல முறை சட்டவிரோதமாக முயற்சி செய்துள்ளார். ஆனால், டப்ளின் சட்டப்படி ஒரு அகதி எந்த நாட்டிற்கு முதலில் செல்கிறாரே அதே நாட்டில் தான் புகலிடம் கோர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. |