சினிமாவில் இதுவரை ஓடும் ரெயிலில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் தான் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு படம் முழுவதுமே ஓடும் ரெயிலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் அது ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ படம்தான். இப்படத்தில் நாயகனாக மிதுன் நடிக்கிறார். நாயகியாக மிருதுளா நடித்திருக்கிறார். மேலும் அனூப் அரவிந்த், அஞ்சலி தேவி, ரோமியோபால் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை என்.ராஜேஷ்குமார் இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி இவர் கூறும்போது, ‘இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக்கரு. இதுவரை நிறைய படங்களில் ரெயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை!
சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்புத் தான் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம். சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது.
ஓடும் ரயிலில் படமாக்குவது என்பது எளிதான காரியமில்லை. ரெயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வு படப்பிடிப்பிற்கு மிகப்பெரிய இடைஞ்சல் அதையும் மீறி ஒளிப்பதிவாளர் ரொம்பவும் சிரமப்பட்டு படமாக்கினார். படம் பார்க்கிற ரசிகனுக்கு புது மாதிரியான உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தும்.
நல்ல கதை கருவுடன் கமர்ஷியல் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறேன். படத்தை பார்த்த ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்கள் உடனே ஒகே சொல்லி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
அதுவே எங்களது படக்குழுவுக்கு கிடைத்த வெற்றி என்றார் இயக்குனர்