
புலிகள் மீண்டும் எழப்போகிறார்கள் என சிங்கள கடும்போக்காளர்களின் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒஸ்ரேலியாவிலிருந்து பிரபாகரன் படை அணி புறப்பட தயாராவதாக பிரபாகரன் படை அணி பிரகடனம் செய்திருக்கிறது.
மீண்டும் ஐந்தாம் கட்ட ஈழப்போர், பிரபாகரன் மீண்டும் வருவார் தமிழீழம் மலரும், பிரபாகரன் படை திரும்பகால் பதிக்கும் மண்ணில், என்ற முழக்கங்கள் ஒஸ்ரேலியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
சரி நீங்கள் அங்கு போய் போராடுங்கள் என முழக்கமிட்டவர்களை ஒஸ்ரேலிய அரசு திருப்பி அனுப்ப முற்பட்டால் ஐயோ எங்கள் உயிருக்கு ஆபத்து, வெள்ளைவான் பிடித்து சென்றுவிடும் என கதறி அழுபவர்கள் தான் மேற்குலக நாடுகளிலிருந்து முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய முழக்கங்கள் மீள இயல்பு வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கும் மக்களையும் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் தான் பாதிக்கும். கடந்த வாரத்தில் ஒஸ்ரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டத்தில் நடந்த நிகழ்வுதான் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் காணப்படும் சமூகவலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் ஏன் ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சிகளிலும் பேசு பொருளாக இருந்தது.
சுமந்திரன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் பற்றிய முடிவுகளை ஏனைய உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது சர்வாதிகாரப்போக்கில் சம்பந்தனும் சுமந்திரனும் முடிவுகளை எடுக்கின்றனர் என்றும் மிக நீண்டகாலமாக தமிழ் மக்கள் புறக்கணித்து வந்த இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டார்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் கேள்வி கேட்பதற்கு அவர்சார்ந்த மக்களுக்கு உரிமை உண்டு. அவையாவும் ஜனநாயக பண்புடன் இடம்பெற வேண்டும்.
ஆனால் ஒஸ்ரேலியாவில் நடந்த சம்பவம் ஜனநாயக பண்புகள் அற்ற அருவருக்க தக்க நிகழ்வாகும்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் யார் இருந்தார்கள், இவர்களின் நோக்கம் என்ன போன்ற விடயங்களை பார்ப்பதற்கு முதல் அன்று நடந்த சம்பவம் பற்றி முதலில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் வெளிவிவகாரங்களை கையாள்பவருமான எம்.ஏ.சுமந்திரன் ஒஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசுவதற்காக ஒஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு கடந்த வாரம் வந்திருந்தார். ஒஸ்ரேலிய அரசின் உத்தியோகபூர்வமான அழைப்பை ஏற்று அவர் வந்திருந்தார் என்பதும் 2011ஆம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சுமந்திரன் ஒஸ்ரேலிய அரச பிரதிநிதிகளை சந்திப்பதற்காக வந்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருடன் சமகால அரசியல் நிலமைகள் அரசியல் தீர்வை நோக்கிய நகர்வின் முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடல் ஒன்றை ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ் என்ற தமிழர் அமைப்பு சிட்னி ஷோம்புஷ் ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
ஓஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ் என்ற அமைப்பு 2009ஆம் ஆண்டுவரைக்கும் விடுதலைப்புலிகள் சார்பு அமைப்பாக செயல்பட்டு வந்தது. ஆயுதப்போராட்டம் முடிந்த நிலையில் இனிமேல் அங்கு ஆயுதப்போராட்டத்திற்கு இடமில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இலங்கையில் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கி செயல்பட்டு வருகிறது. கனடா தமிழ் கொங்கிரஷ், உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களும் இதேநிலைப்பாட்டைத்தான் தற்போது கொண்டுள்ளன.
ஏற்கனவே தமிழ்நாட்டில் என்.கே.நாராயணன் மீது பிரபாகரன் என்ற ஒருவர் செருப்பால் அடித்த சம்பவத்தை பாராட்டி துள்ளிக்குதித்த புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சில தமிழர்கள் சுமந்திரன் போன்றவர்கள் மேற்குலக நாடுகளுக்கு வந்தால் அதேபோன்று செருப்பால் அடிக்க வேண்டும், தாக்குதல் நடத்த வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்நிலையில் தான் ஒஸ்ரேலியா சிட்னியில் சுமந்திரன் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிந்து கொண்ட ஒஸ்ரேலியாவில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் அக்கூட்டத்தை குழப்பி சுமந்திரனுக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டனர்.
இதற்காக அண்மைக்காலத்தில் ஒஸ்ரேலியாவுக்கு அகதி தஞ்சம் கோரி வந்த சுமார் 40 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முதலே இவர்கள் மண்டபத்தில் கூடியிருந்தனர். வந்திருப்பவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்களுடன் சில புதிய இளைஞர்களும் வந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்ட கூட்ட ஏற்பாட்டாளர்கள் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படலாம், கேள்விகளை கேட்பார்கள் என சுமந்திரனுக்கு கூறியிருக்கின்றனர். தாராளமாக எந்த கேள்விகளையும் கேட்கலாம், நான் அவர்களுக்கு பதிலளிக்கிறேன் என சுமந்திரன் கூட்டம் ஆரம்பமாவதற்கு முதலே கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு கூறியிருக்கிறார்.
கூட்ட மண்டபத்திற்கு சுமந்திரனும் அவருடன் சிலரும் வந்து கூட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேளையில் அங்கு தயாராக இருந்தவர்கள் வெறிபிடித்த நாய்கள் கடித்து குதறுவதற்காக குரைத்துக்கொண்டு பாய்வது போல சுமந்திரனை நோக்கி துரோகி என துஷணவார்த்தைகளால் திட்டி தீர்த்தவாறு கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என கலவரம் விளைவித்தனர்.
உச்சரிக்க நா கூசும் துஷண வார்த்தைகள் மண்டபத்தை அதிரவைத்தன. சுமந்திரனே ஒஸ்ரேலியாவை விட்டு போ, என கூச்சல் இட்டனர்.
உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தாராளமாக கேளுங்கள், அதற்கு அவர் பதில் சொல்வார், ஆனால் கூட்டத்தை குழப்பாதீர்கள் என கூட்ட ஏற்பாட்டாளர்கள் வினயமாக கேட்ட போதிலும் அதை எல்லாம் கேட்ககூடிய ஜனநாயக விழுமியங்களை மதிக்க கூடியவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதை அந்த சம்பவங்களை அவதானிக்கும் எவரும் உணர்ந்து கொள்வார்கள்.
ஜனநாயக ரீதியாக தமது எதிர்ப்பை காட்டுவதற்கோ வக்கற்று கொடூரமான வக்கிரதனம் கொண்டவர்களாக அரசியல் வரட்சி மிக்கவர்களாக தமக்கு பிடிக்காதவர்கள் எல்லோருக்கும் துரோகி பட்டங்களை வழங்க வேண்டும் என குரூர மனம் கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.
யாழ். மாவட்டத்தில் சுமார் 55ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரிடம் கருத்து முரண்பாடுகள், கொள்கைமுரண்பாடுகள் இருந்தால் நாகரீகமான முறையில் கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால் ஒரு சபையில் பேசக்கூடாத வார்த்தைகளால் மக்கள் பிரதிநிதி ஒருவரை ஏசி திட்டி தீர்ப்பது எந்தவகை நியாயம்?
அநாகரீகமாக நடந்து கொண்ட அவர்களிடம் இரு நோக்கங்கள் இருந்திருக்கலாம் என நான் எண்ணுகிறேன்.
ஓன்று சுமந்திரனை அவமானப்படுத்துவது, அடுத்தது அதனை ஒளிப்பதிவு செய்து சமூக தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட்டு சுமந்திரனுக்கு எதிராக பிரசாரம் செய்வது. ஆனால் அவர்களின் இந்நோக்கங்களின் பெறுபேறு வெற்றி அளித்ததாக கூற முடியாது. கடந்த பொதுத்தேர்தலின் போது சுமந்திரனை அவதூறு படுத்தும் வகையில் பருத்தித்துறையில் துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அத்துண்டு பிரசுரமே சுமந்திரனுக்கான வாக்கை மேலும் அதிகரிக்க செய்திருந்தது.
அது போல கூட்டத்தை குழப்பியதும் அநாகரீகமாக நடந்து கொண்டதும் அவர்கள் மீது ஜனநாயகத்தை மதிக்கும் பலர் வெறுப்படைத்தனர். இந்த அருவருக்க தக்க செயலை பலரும் கண்டித்தனர். சுமந்திரனை அவமானப்படுத்த நினைத்து தாங்களே சேறு பூசியவர்களாக மாறிக்கொண்டனர்;.
சில வாரங்களுக்கு முதல் கனடாவிலும் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க முற்பட்டனர். ஆனால் கூட்ட ஏற்பாட்டாளர்கள் அதனை சாதுரியமாக தடுத்து விட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் கலந்துரையாடல்களில் கேள்விகளை கேட்டு குழப்பங்களை விளைவித்து அதனை வீடியோ எடுத்து பிரசாரம் செய்யும் போக்கு அண்மைக்காலத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ந்து வருகிறது.
சுமந்திரன் ஜெனிவா வீதியில் நடந்து சென்ற போது தனக்கு வணக்கம் சொல்லாது சென்றுவிட்டார் என குற்றம் சாட்டி ஒருவர் சுமந்திரனை மிக மோசமாக ஏசியதை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம், பேர்ண் நகரில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்த உள்ளக கலந்துரையாடல் ஒன்றிற்குள் அழையாமல் உள்ளே நுழைந்து சுமந்திரனிடம் கேள்விகளை கேட்டு அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட சம்பவம், ( சுவிஸ் சட்டத்தின் படி உள்ளக கலந்துரையாடல் ஒன்றை கூட்ட ஏற்பாட்டாளர்களின் அனுமதி இன்றி ஒலிப்பதிவு செய்யவோ அதனை வெளியிடவோ கூடாது) சுவிஸ் பாசல் நகரில் மாவை சேனாதிராசா கலந்து கொண்ட கலந்துரையாடலில் கேள்விகளை கேட்டு வாக்குவாதப்பட்டு அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட சம்பவம், ஜேர்மனியில் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் நடத்திய மகாநாட்டில் மாவை சேனாதிராசா கலந்து கொண்ட போது விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ஒருவர் மேடையில் ஏறி பொருத்தமற்ற கேள்விகளை கேட்டு அதனை ஒலிப்பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் என பல விடயங்களை சுட்டிக்காட்டலாம்.
ஜேர்மனியில் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் நடத்திய மகாநாட்டில் மாவை சேனாதிராசா உரையாற்றிய பின் தானும் மேடையில் உரையாற்ற வேண்டும் என விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த ஒருவர் மாநாட்டு ஏற்பட்டாளர்களை கோரினார். அவர்களும் அதற்கு இணங்கினர். மேடையில் ஏறிய அந்நபர் மாவை சேனாதிராசா ஆற்றிய உரையில் இனப்படுகொலை என்பதை பற்றி ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார். ஒருவர் தன்னுடைய உரையில் எதை பேசவேண்டும் என தீர்மானிப்பது அவரின் உரிமை. பேசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கலாமே ஒழிய ஏன் இந்த விடயத்தை பற்றி பேசவில்லை என எப்படி கேள்வி கேட்க முடியும்?
விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்களில் உலக தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாடு பற்றி செய்தி வெளிவரவில்லை, ஆனால் மாவை சேனாதிராசாவை கேள்வி கேட்டு தர்க்கம் புரிந்த சம்பவம் பற்றிய வீடியோ அந்த இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அவமானப்படுத்தி அதனை வீடியோ எடுத்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தரப்பு செயல்படுவதை உணரமுடிகிறது.
கடந்த காலங்களில் சிறிலங்கா அரச தரப்பினர் அல்லது சிங்கள தலைவர்கள் வெளிநாடுகளுக்கு வருகின்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்த தரப்பினர் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி அவர்களின் அம்புக்கள் பாயத்தொடக்கியிருக்கிறது.
மகிந்த ராசபக்ச லண்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்த வேளையில் தமிழர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அது போல இவ்வருட ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேனா லண்டனுக்கு வந்த போதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழர்களால் நடத்தப்பட்டது. இலங்கையில் ஆட்சிமாற்றம் நடைபெற்றது லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தெரியாது என பிரித்தானிய மகாராணி மைத்திரியிடம் கூறியதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. தமிழர்கள் பற்றி எலிசபெத் மகாராணி எப்படி எடைபோட்டு வைத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவந்தது.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி எமது இனத்தை அழித்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.
ஆனால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை குறிப்பாக மாவை சேனாதிராசா, சுமந்திரன் போன்றவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை குழப்பி அவர்களை அவமானப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதன் நோக்கம் என்ன?
ஐரோப்பா கனடா ஒஸ்ரேலியா என பரந்திருக்கும் மேற்குலக நாடுகளில் 2009வரை, விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முடியும் வரை இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான அமைப்புக்கள் விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்றுப்போனதை அடுத்து மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் அமைப்புக்கள் இரண்டாக பிளவு பட்டன.
பிரபாகரன் மீண்டும் வருவார், ஆயுதப்போராட்டம் தொடங்கும், தமிழீழமே முடிந்த முடிவு என்ற நிலைப்பாடை கொண்டவர்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஈழத்தமிழரவை ஆகிய அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நேரடியாக ஆதரிக்கின்றனர்.
மீண்டும் ஆயுதப்போராட்டம் சாத்தியமில்லை, சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ், கனடிய தமிழ் கொங்கிரஷ், உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியன உள்ளன. இவர்கள் தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். ஜனநாயகரீதியிலும் ராஜதந்திரரீதியிலும் போராட்டம் நகர்த்தப்பட வேண்டும் என அதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகளின் நேரடி அமைப்புக்களாக செயற்படும் அனைத்துலக தொடர்பகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஈழத்தமிழரவை ஆகியன கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மிகக்கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டிருந்தது. மாற்றத்திற்கான குரல் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி மேற்குலக நாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்காக பிரசாரம் செய்தனர். நோர்வேயில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் பெயரில் பெருந்தொகையான பணம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுப்பபட்டது.
மற்ற தரப்பான உலகத்தமிழர் பேரவை, ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ், கனடிய தமிழ் கொங்கிரஷ் போன்றன தீவிரமான பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும் சிறிய நிதி உதவிகளையும் சில பிரசாரங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக செய்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறிப்பாக சுமந்திரன் போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் மேற்குலக நாடுகளில் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்தனர். அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ். மாவட்டத்தில் தனது பிரசாரத்தின் முக்கிய கருப்பொருளாக கொண்டு செயல்பட்டனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சாதகமாக அமையவில்லை, தாங்கள் துரோகியாக மக்கள் மத்தியில் இனங்காண்டிய நபர் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சியான செய்திதான்.
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மட்டுமல்ல உலக தமிழர் பேரவை, ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ், கனடிய தமிழ் கொங்கிரஷ் ஆகியவற்றை பழிதீர்க்க வேண்டும், அவர்களை மக்கள் மத்தியில் துரோகிகளாக காட்ட வேண்டும் என்பதே இப்போது மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் உள்ள பிரதான நோக்கமாகும்.
இவர்கள் வன்முறைகள் அராஜகங்களை புரிவதற்காக புதிதாக வந்த இளைஞர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிட்டால் இலங்கைக்கு தாங்கள் போகமுடியாது என அகதி அந்தஸ்து கிடைக்க வாய்ப்புண்டு’ என்று நம்ப வைக்கப்பட்டு இந்த இளைஞர்கள் இறக்கி விடப்படுகிறார்கள்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான தமிழர்களின் போராட்டம் சரியான திசையில் நிதானமாக வழிநடத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஷ் கனடிய தமிழ் கொங்கிரஷ் போன்ற அமைப்புக்கள் அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியுறவு கொள்கைவகுப்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். ஆனால் அதனை முறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டங்கள் சந்திப்புக்களை குழப்பும் வேலைகளில் விடுதலைப்புலிகள் தரப்பு ஈடுபட்டிருக்கிறது.
அதேசமகாலத்தில் விடுதலைப்புலிகளின் சார்பு அமைப்புக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அழைத்து கூட்டங்களை ஆலோசனை நடத்துகின்றனர். ஆனால் மேற்குலக நாடுகளில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்களையோ அல்லது கொள்கைவகுப்பாளர்களையோ தமிழ் மக்கள் சார்பில் உத்தியோகபூர்வமாக சந்திக்கும் வாய்ப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடையாது.
இந்த பின்னணியிலேயே ஒஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க வந்த சுமந்திரனை ஒஸ்ரேலியாவை விட்டு வெளியே போ என ஒரு தரப்பு கூச்சல் இட்டிருக்கிறது.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல சுமந்திரன் தொடர்பாக விமர்சனங்கள் பல உண்டு. அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். வெறும் கூச்சல் போட்டு துரோகி பட்டங்களை சுமத்தி துஷணவார்த்தைகளால் ஏசி திட்டி தீர்ப்பதால் எதனையும் சாதித்து விட முடியாது.
பொதுவாகவே அரசியல் ஆளுமை ஆற்றல்கள் உள்ளவர்களை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டதில்லை, தமிழ் அரசியல் பரப்பில் கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற ஆளுமை மிக்க சட்ட அரசியல்யாப்பு விடயங்களில் நிபுணத்துவம் கொண்ட ஒருவர் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் இருந்ததில்லை, அதேபோன்று அமிர்தலிங்கத்தை போன்ற ஆளுமை மிக்க ஒருவர் இன்று தமிழ் அரசியல் பரப்பில் கிடையாது.
நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் ஆகியோருக்கு நிகராக இல்லாவிட்டாலும் அரசியல்துறையில் ஆளுமை மிக்க ஒருவராக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார். இதனால்தான் கடந்த பொதுத்தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற வேண்டும் என அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் மறைமுகமாக செயல்பட்டன.
நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் ஆகியோர் துரோகிகள் ஆக்கப்பட்டு விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். ஆளுமை மிக்க தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் விடுதலைப்புலிகளாலும் சிறிலங்கா அரசபடைகளாலும் அவர்களுடன் இணைந்த ஒட்டுக்குழுக்களாலும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர்.
இப்போது நீலன் திருச்செல்வம் அமிர்தலிங்கம் வரிசையில் சுமந்திரன் துரோகியாக்கப்பட்டிருக்கிறார்.
இரா.துரைரத்தினம்.