முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது.
இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கு 10 ஆண்டுகள் அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் வெற்றி பெற்றதையடுத்து இதற்கும் ஐசிசி அனுமதி வழங்கி உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் போட்டியில் கங்குலியின் லிப்ரா லெஜண்ட்ஸ் மற்றும் ஷேவாக்கின் ஜெமினி அரேபியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும் தொடரின் முதல் லீக் போட்டி ஜனவரி 28ம் திகதி துபாயில் நடக்கிறது. மொத்தம் 18 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் அரையிறுதில் பெப்ரவரி 11ம் திகதியும், இரண்டாவது அரையிறுதி பெப்ரவரி 12ம் திகதியும் நடக்கிறது. இறுதிப் போட்டி துபாயில் பெப்ரவரி 13ம் திகதி நடைபெறுகிறது.
|