கச்சதீவில் தேவாலயம் நிர்மாணிப்பது நிறுத்தப்பட வேண்டும்! கருணாநிதி 

182

07-1460017500-karunanidhi3664535-600-jpg

கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்ட காலமாகவே பிரச்சினைக்குரிய பாக் ஜல சந்தியில் உள்ள கச்சதீவில் பழமை வாய்ந்த அந்தோனியார் கோவிலை 1930-ல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார்.

அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டில் இருந்து கொண்டு வந்த ஓடுகளை 1951-ல் வேய்ந்தனர்.

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இந்தக் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு பெப்ரவரி மாத இறுதியில், கிறித்துவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கச்சதீவுக்கு சென்று, அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

பழமை வாய்ந்த ஓடுகளால் வேயப்பட்ட இந்த அந்தோனியார் கோவில் திருவிழாவில் தமிழகத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

பழமையும், பெருமையும் வாய்ந்த இன்றைக்கு இந்தக் கோவில் இருக்கும்போது இன்னொரு கோவில் புதிதாகக் கட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டிருக்கிறது என்று புரியவில்லை.

பழமை வாய்ந்த இக்கோவிலையே விரிவுபடுத்தலாம். இருநாட்டு மக்களும் இந்தக் கோவிலை புனிதமாகக் கருதுகிறார்கள்.

இந்நிலையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனாவிடம் கத்தோலிக்கத் திருச்சபை, விடுத்த கோரிக்கையினையொட்டி, புதிய கோவிலுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

புதிய கோவில் கட்டுமானம் குறித்து தமிழக மீனவர்களிடமும், குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்களிடமும், இந்திய அரசிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிரச்சினையிலும், சட்டச் சிக்கலிலும் உள்ள இந்த கச்சதீவு விவகாரத்தில் மேலும் சிக்கலை உருவாக்கி விடுமோ என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது.

தமிழகத்தின் பகுதியான கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதையே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கும் பொழுது, அங்கு புதிதாக ஒரு தேவாலயம் கட்டுவது ஒரு இணக்கமான நிலை ஏற்படுவதற்கு உதவிடுமா என்பதில் தான் நமக்குக் கவலை ஏற்படுகின்றது.

ஏற்கெனவே இந்திய மீனவர்கள் கச்சதீவில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குச் செல்வதற்கும், தங்களுடைய வலைகளை உலர்த்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் செல்லலாம் என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும், அதை இலங்கை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது.

புதிய தேவாலயம் அமைப்பதை விட ஏற்கனவே இருக்கின்ற பழமை வாய்ந்த தேவாலயத்தை விரிவுபடுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், புதிய கோவில் கட்ட முனைவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பானதாகும்.

எனவே புதிய கட்டுமானத்தைத் தவிர்த்திடும்படியும், பழைய தேவாலயத்தையே விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், புதுப்பித்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE