கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகிறதா பொலிஸ்?

248
பருத்தித்துறைப் பொலிஸார் கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும்படி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஞ்சா போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்படாத ஒருவர் தமக்குத் தகவல் தருபவர் என்று பொலிஸார்  கூறியிருந்த போதும் விசாரணையில் அவரே கஞ்சா கடத்தும் முக்கிய நபர் என்று தெரிய வந்தது. இந்த விடயம் நீதிமன்றில் அம்பலமானதைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணை மேற்க்கொள்ளுமாறு வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குப் பருத்தித்துறை நீதிவான் பணித்தார்.
4 கிலோ 100 கிராம் கேரளக் கஞ்சாப் பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில் இராண்டாம், மூன்றாம் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செல்வி. யோ. யோகானந்தினி, அவர்களுக்குப் பிணை கேட்டார்.
பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தர்ஷன தனது தரப்பு வாக்கு மூலத்தை மன்றுக்கு வழங்கினார். அதில், தமக்குத் தகவல் தருபவராக கெங்காதரன் என்பவரைக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் கெங்காதரனே முதலாவது சந்தேகநபராகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். இவரே அந்தப்பகுதியில் தமக்குத் தகவல் தருபவர் என்றும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பெற்ற தகவல் பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்புப் புத்தகத்தில் இருக்கின்றது.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கில் மூன்று சந்தேக நபர்களை மன்றில் முற்படுத்திய பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க குறித்த சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு ஒன்றைப் பெற்றார். இந்த விசாரணையின்போது சந்தேக நபர் ஓருவர் வாக்கு மூலம் வழங்கியிருந்தார். அதில், கஞ்சாவைக் கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து கொண்டு பொலிஸார் இந்த வழக்கைச் சோடிக்கின்றார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த நீதிவான் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் ஏற்படுவதால் இது குறித்து விசேட குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை இடுமாறும் முக்கிய சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் வடமாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தக் கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறும் நீதிமன்று கட்டளை பிறப்பிப்பித்தது. சந்தேக நபர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
SHARE