கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் நிலை இதுதான்

256

இலங்கைக்கொடியுடன் கடத்தப்பட்ட கப்பலில் உள்ள 8 இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்த 8 இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு ரூபா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 760 மில்லியன்) கப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை, கப்பலில் இருந்த 8 இலங்கையர்களையும் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்களின் குடும்பத்தவர்கள் வர்த்தகக் கப்பல் அத்தியட்சகரை இன்று சந்திக்கவுள்ளனர்

இதன்போது கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களைத் தெளிவுபடுத்தவுள்ளதாக வர்த்தகக் கப்பல் அத்தியட்சகர் அஜித் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில்,

தலைமை அதிகாரி – மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத்

தலைமை பொறியியலாளர் – ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில

மாலுமி – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ்

மூன்றாவது அதிகாரி – காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர

மூன்றாவது பொறியியலாளர் – மாத்தறையைச் சேர்ந்த ஜனக சமேந்திர

கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா (bosun),

அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த லகிரு இதுநில் விதானபதிரன,

நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ.சண்முகம் ஆகிய இலங்கையர்களே இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.

மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

தமது உறவுகள் கடத்தப்பட்ட விடயம் அறிந்தவுடன் அவர்களை மீட்டுத்தருமாறு உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE