கடத்தல் மற்றும் காணாமல் போதலில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரட்டை நிலைப்பாடுகள்

216

கடத்தல் மற்றும் காணாமல்போதலில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் தெற்கில் நடந்தால் அரச பயங்கரவாதம் என்றும், வடக்கில் நடந்தால் அரச நிர்வாகம் என்றும் கூறுவது எந்த விதத்தில் நியாயமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடத்தல் மற்றும் காணாமல் போதல் என்பவற்றில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இங்கு ஒரு சட்டம், அங்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. காணாமல் ஆக்கல் என்ற குற்றத்தை நாம் எல்லோரும் ஒழிக்க வேண்டும்.

அதன் ஒரு அங்கமாகவே இந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவலம் வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் 1971, 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது. 1971ல் 10,000 பேர் காணாமல்போனதாக சொல்லப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அன்று ஒரு மனித உரிமை போராளியாக இருந்து 60,000 பேர் காணாமல் போனதாக சொன்னார். அந்த வகையில், தெற்கில் காணாமல் போனவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள்.

இன்று கொழும்பில் இராணுவத்தினர், பெற்றோல் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவம் என்பது, ஒரு தங்க கத்தி என பெருமை பேசலாம். ஆனால், கத்தி தங்கமாக இருந்தாலும், குத்தினால் இரத்தம் வரும்.

எனவே இன்று சேவைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் நாளை ஆட்களை கடத்தலாம். இது நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கலாம்.

எனவே காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது, தமிழருக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பிரயோசனமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE