“கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது”

314
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது. அன்றைய தினம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மனித உரிமை செயற்பாட்டாளர் சர்மிளா, இந்திய இராணுவத்திற்கு  வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் சட்டமூலத்திற்கு எதிராக தான் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின் 15 வருடத்தினை நிறைவுசெய்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அசாம்ரைபில்ஸ் படைப்பிரிவினால் 10 மணிப்பூர் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் 2000 ம் ஆண்டு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கடந்த 15 வருடங்களாக அவர் சுயநலமற்ற ஈடுஇணையற்ற போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரிற்கு விசேடஅதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தினை நீக்குமாறு கோரி டில்லியில் இடம்பெற்ற மாநட்டில் உரையாற்றியவர்கள் தெரிவித்ததுபோல உரிமைகள் மற்றும் கௌரவத்துடன் வாழவேண்டும் என்ற மக்களின் சாதாரண அபிலாஷையை பிரதிநிதித்துவம் செய்யும் சாதாரண பெண்மணி சர்மிலா.
எனினும் அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்த விதம் அசாதாரணமானது என குறிப்பிட்டார், சர்மிலாவின் வாழ்க்கைசரிதமான பிரகாசமாக எரிதலை எழுதிய பேராசிரியர் தீப்தி பிரியா மெகோத்திரா.
அவர் அகிம்சையை தத்துவார்த்தரீதியாக பின்பற்றுகின்றார், தந்திரோபாய ரீதியில் அல்ல, அரசு தனது அனைத்து மக்களிற்கும் வாழ்வதற்கான  சமஉரிமையை வழங்காத பட்சத்தில் வாழ்க்கையை வாழ முடியாது என்றஅவரது பிரகடனம் இதுவெனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
எனினும் அரசாங்கம் துரதிஸ்டவசமாக இதனை செவிமடுக்கவில்லை என்றே அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். கடந்த பல வருடங்களிற்கு பின்னர்  வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுகின்றது என மனித உரிமை பணியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும் பாதுகாப்பு படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தை நீக்குமாறு ஐக்கியநாடுகள் நிபுணர்களும் உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளும் தொடர்ச்சியாக வேண்டுகோள்விடுத்து வருகின்றபோதிலும்,அரசாங்கம் அந்த சட்டத்;தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகின்றது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பான உயர்மட்ட குழு குறிப்பிட்ட சட்டத்தை நீக்குமாறு பரிந்துரைசெய்துள்ளது,இதற்கு முன்னரும் அரசாங்கம் நியமித்த பல குழுக்கள் இந்த பரிந்துரையை முன்வைத்தன,நீதிபதி ஜீவன் ரெட்டி ஆணைக்குழு,இரண்டாவது நிர்வாகசீர்திருத்த ஆணைக்குழு. ஜம்மு காஸ்மீரில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பான பிரதமர் ஆணைக்குழுக்கள் ஆகியனவும் இந்த சட்டத்தை அகற்றகோரியுள்ளன என மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்மிளாவே தான் சட்டபூர்வமான ஆனால் அரசியல்ரீதியில் புதிரான ஓரு வாழ்க்கையை வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.தனது போராட்டம் வாழ்வதற்கான உரிமையை கோரியே முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மரணிக்க விரும்பவில்லை மாறாக முழுவாழ்க்கையை வாழவிரும்புகின்றார் எனினும் அவர் மீது தற்கொலைக்கு முயற்சிசெய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 365 தரம்நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த சடங்கு 15 நாட்களிற்கு ஓரு முறை இடம்பெறுகின்றது,தனது கருத்துக்களை நீதிமன்றத்தில் தன்னுடன் இணைந்து முன்வைப்பதற்காக சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள நபர்கள் நீதிமன்றம் வரவேண்டும் என சர்மிளா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைசேர்ந்த மாணவர்களிற்கு சர்மிளா புலமைப்பரிசில் வழங்கப்படுவது வழமை ,இதற்காக விண்ணப்பித்த  இரு மாணவர்களின் வாக்குமூலங்களை சமூகவியலாளர் நந்தினி சுந்தர் வாசித்துகாண்பித்தார்.
இரு வாக்குமூலங்களும் படையினரின் கரங்களில் தாங்கள்மரண பயத்தை சந்தித்த பயங்கரமான அனுபவத்தை தெரிவிப்பவையாக காணப்பட்டன,அவை தங்கள் மனங்களில், சிந்தனையில் ஏற்படுத்திய அதிர்வுகளையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
குறிப்பிட்ட சட்டம் எங்கெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மன அழுத்தங்கள், மனநோய்களுடன் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வதை சமூகவியலாளர் சஞ்சோய் ஹசரிகா வர்ணித்தார்,இந்த மக்களிற்கு எந்தவித மருத்துவ உதவியும் இல்லாததே இங்கு குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்தவர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட குறும்படம் 2012 இல் மணிப்பூரில் படையினரால் 1528 பேர் படுகொலைசெய்யப்பட்டது குறித்த விபரங்களை உச்சநீதிமன்றத்திற்கு தாங்கள் சமர்ப்பித்ததாக தெரிவித்தது, இதில் ஆறு சம்பவங்களை எடுத்து ஆராய்ந்த நீதிமன்றம் இராணுவம் தெரிவிப்பது பொய் என்ற முடிவிற்கு வந்தது.
இந்த சம்பவங்கள் நீதிமன்றத்திடம் செல்ல தொடங்கிய பின்னர் 2013 இல் படுகொலைகளின் எண்ணிக்கை பல மடங்காக குறைந்துள்ளது எனவும் அந்த குறும்படம் தெரிவித்தது.
எனினும் நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிப்பதை துரிதப்படுத்தா விட்டால் இந்த படுகொலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது,மேலும் குடு;பத்தவர்களும், சாட்சிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் என்ற கருத்தும் காணப்படு;ன்கிறது, படையினரால் படுகொலை செய்யப்பட்ட நபர் ஓருவரின் மனைவி தான் தொடர்ந்துள்ள வழக்கை மீளப்பெறுமாறு படையினர் தன்மீது கடும் அழுத்தங்களை தொடுத்துவருதாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொணட பேராசிரியர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஓருவரும் சிவில் சமூகத்தினர் சர்மிளா இறந்த பின்னர் அறிக்கை விடுவதற்காக காத்திருக்கின்றதா என கேள்வி எழுப்பினர்.
சர்மிளாவின் போராட்டத்தை ஓரு அரசியல்போராட்டமாக மாற்றமுடியாவிட்டால்  அது கூட்டுத்தோல்வியாக அமையும் என சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஓருவர் அது உண்மையானால் தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை என சர்மிளா கருவது சரியே என குறிப்பிட்டார்
SHARE