அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை அண்டிய கரையோரப் பிரதேசத்தினை சிலர் சட்டவிரோதமாக கையப்படுத்தி வருவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பிரதேச மக்கள் முறையீடு செய்ததனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
சில தனி நபர்கள் கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள நிலங்களில் வேலியிட்டு கையகப்படுத்தி வருவதோடு, அந்நிலங்களில் தென்னை மரங்களை நட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு தனிநபர்கள் கடற்கரை பிரதேசத்தினை ஆக்கிரமித்து வருவதால் மீனவர்கள் தமது கடற்றொழிலில் சுதந்திரமான முறையில் ஈடுபடுவதற்கு தடையாக அமைவதோடு, பொழுது போக்கிற்காக இப்பிரதேசம் நாடி வருவோருக்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பொது நிலங்களை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோர் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தாம் அமைத்த வேலிகளை அப்புறப்படுத்துமாறு பிரதேச செயலாளர் குறிப்பிட்ட நபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.