கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!

112

 

இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார்.

“யாழ் பொன்னாலையில் ஆயுதம் தரித்த கடற்படையினரின் முன்பாகவே வன்முறைக் கும்பலொன்றினால் தமிழ் இளைஞனொருவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமையானது தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் மீதான சந்தேகத்தினை மென்மேலும் வலுவடையச்செய்துள்ளது .

இலங்கை கடற்படையின் கடமை என்பது பொதுமக்களை பாதுகாப்பதா? அல்லது அவர்களின் காணிகளை அபகரிப்பதா? என்றுகருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வன்முறைக் கும்பல்
மேற்படி கடத்தலில் குறித்த முகாமிலுள்ள கடற்படையினருக்கும் தொடர்பிருப்பதாகவே ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் இதேநிலை தென்னிலங்கையில் ஒரு சிங்கள இளைஞனுக்கு நடைபெற்றிருந்தால் அந்த கடற்படை முகாம் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறு கடற்படை முகாம் மீது கைவைத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளும் ஜனநாயகமே இலங்கையில் காணப்படுகின்றது.

கண்முன்னே ஒரு பொதுமகனை காப்பாற்றமுடியாத லட்சக்கணக்கான சிறீலங்கா பாதுகாப்பு படைகள் தமிழர் தாயகத்தில் ஏன் முகாம்களை அமைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தினை அழிக்கிறார்களென்று பாமரமக்களும் கேள்வியெழுப்புகின்ற சூழ்நிலையினையே பொன்னாலை கடத்தல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞனை கடமையிலிருந்த கடற்படையினரால் வன்முறைக் கும்பலை கட்டுப்படுத்தி காப்பாற்றமுடியாமல் போனதாக கடற்படையின் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய கூறியிருப்பது வேடிக்கையாக அமைந்திருப்பதாகவே கருதவேண்டியிருக்கின்றது.

ஏனெனில் உலகின் பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கமாக விளங்கிய விடுதலைப்புலிகளை அழித்ததாக கூறுகின்ற சிறீலங்கா பாதுகாப்பு படையினரால் சாதாரண வன்முறைக்கும்பலிடமிருந்து ஒரு இளைஞனை மீட்கமுடியவில்லையென்று கூறுவது நகைச்சுவையான கேலிக்கூத்து.

இவ்வாறான பயனற்ற கடற்படையினர் தமது தேவைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து முகாம்களை அமைக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக விளங்கிய காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் ஆவா என்கிற வன்முறை கும்பலை உருவாக்குவதில் அப்போதைய யாழ். மாவட்ட இராணுவ தளபதி பெரும்பங்கினை வகித்திருந்ததாக கூறப்படுவது உண்மையாகவே இருக்கக்கூடுமென்று எண்ணத் தோன்றுகின்றது.

இதே இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என்பதும் நினைவுக்கு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

SHARE