கடற்பரப்பினூடாக கொண்டுவரப்படும் பொருள்: தாக்கம் செலுத்தும் யாழ்ப்பாணம்

141

கேரள கஞ்சா கடத்தல் அதிகரித்துவரும் நிலையில், அதனைத் தடுக்க இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்தியாவின் சட்ட அமுலாக்கல் பிரிவின் ஒத்துழைப்பைக் கோருவதற்காக அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 4,660 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை கேரள கஞ்சாவாகும். இதேநேரம், இந்த ஆண்டில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2,721 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்கள் உட்பட கேரள கஞ்சா வடக்கு கடற்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும், யாழ்ப்பாணம் இதில் மிகவும் தாக்கம் செலுத்தும் பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல் தொடர்பான உள்ளூர் விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண இந்திய அதிகாரிகளின் உதவி அவசியம் என்றும் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE