கடற்றொழில் பிரதிநிதிகளின் கேள்விக்கு டக்ளஸ் விளக்கம்

22

 

கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எழுத்து மூலம் பெறத்தேவையில்லை எனவும், எனது சொல்லும் செயலும் ஒன்று தான் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பிரதிநிதிகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (22.03.2024) இந்திய கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி இடம்பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே இரவில் தீர்வு காண்பதற்கு. இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினை இன்று – நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல .

இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை நிறுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.

எழுத்து மூல உறுதி
இதன் போது கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர் ஒருவர்,

“இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவது தொடர்கிறது ஏன் அவர்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.

அது மட்டுமல்லாது நீங்கள் கூறும் போது அத்துமீறிய இந்திய படகுகளை கரைக்கு பிடித்து வாருங்கள் எனக் கூறினீர்கள். எழுத்து மூல உறுதியை தர ஏன் மறுக்கிறீர்கள் ”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த டக்ளஸ், “ எனது சொல்லும் செயலும் ஒன்றுதான் எழுத்து மூலம் உறுதி தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கைது செய்து வாருங்கள் பிரச்சினை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SHARE