கடலில் நீச்சலிட்ட பெண்மணியை மீட்ட மீனவர்கள்

278
பிரித்தானிய பெண்மணி ஒருவர் சுற்றுலா கப்பலை துரத்திப் பிடிக்கும் பொருட்டு கடலில் தனியாக நீச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியான 65 வயது சூசன் பிரவுன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் பிரவுன் ஆகியோர் சொகுசு கப்பல் ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர்.

32 நாள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்தில் இருந்து சில காரணங்களால் 28-வது நாளில் இருவரும் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி போர்த்துகீசிய தீவில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்ப இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே போர்த்துகீசிய தீவில் இருந்து கப்பல் புறப்படும் நேரத்தில் தமது கணவரை தேடிய சூசனுக்கு பார்வைக்கு எட்டிய தூரமெங்கும் அவரை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தம்மை தனிமைப்படுத்திவிட்டு கணவர் கப்பலில் சென்றுவிட்டாரோ என நினைத்த சூசன், உடனடியாக தண்ணீரில் குதித்து புறப்பட்ட கப்பலை துரத்தி நீச்சலிட்டுள்ளார்.

துறைமுகத்தில் இருந்து சுமார் 1600 அடி தூரம் கப்பல் புறப்பட்டு சென்ற திசை நோக்கி நீச்சலடித்து வந்த அவர் நள்ளிரவு நேரம் உதவி கேட்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் இவரது கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்டு தங்களின் படகில் கரை சேர்த்துள்ளனர்.

65 வயதான அந்த பெண்மணி குளிர்ந்த தண்ணீரில் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக நீச்சலிட்டுள்ளதால் அவருக்கு கடினமான உடல் வெப்பக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் போர்த்துகீசிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சூசனின் இந்த நிலைக்கு உண்டான காரணம் குறித்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE