இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
குழந்தைகள், விமான அதிகாரிகள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தமாக 189 பேரைக் கொண்ட குறித்த விமானம் சுமாத்திரா கடலில் வீழ்ந்துள்ளது.
கரையோரப்பகுதியிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் 30 மீற்றருக்கு அதிகமான ஆழத்தில் JT610 என்ற லயன் விமானம் நேற்று (திங்கட்கிழமை) காலை கடலுக்குள் வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 24 பேரின் சடலங்கள், மேலும் சிலருடைய உடைமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள், பொருட்களை அடையாளங்காண்பதற்காக, அவைகள் வைக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைக்கு பயணிகளின் உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் எவரேனும் உயிரோடு இருப்பதற்கான அடையாளங்களோ சாத்தியக்கூறுகளோ இல்லையென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
JT610 விமானமானது புதிதாக தயாரிக்கப்பட்டு பரிட்ச்சித்த பின்னரே பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும், புறப்பட்டு 13 நிமிடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடலுக்கடியில் மேற்கொண்டுவரும் மீட்புப்பணிகள் இன்றைய தினமும் தொடருமென இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமையத்தின் தலைவர் சயிர்ஜான்டொ தெஜஹ்ஜோனோ தெரிவித்துள்ளார்.