அமைச்சுக்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளியிடும்போது, அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாதென, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணி தொடர்பில், கடந்த வாரம் ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து, நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமர் கடும் தொனியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான அறிக்கைகளை வெளியிடும்போது சுயவிருப்பின் பிரகாரம் நடந்துகொள்ள வேண்டாமென குறிப்பிட்ட பிரதமர், அமைச்சுக்களின் அனைத்துச் செயலாளர்களும், உயரதிகாரிகளும் அரசின் கொள்கைக்கமையவே செயற்பட வேண்டுமெனவும் ஊடகங்களுக்கோ மற்றும் வேறு சந்தர்ப்பங்களிலோ அறிக்கைகளை வெளியிடும்போது அரசின் கொள்கைக்கமையவே செயற்பட வேண்டுமெனவும், தமது தனிப்பட்ட கருத்துக்களையோ, சுய நிலைப்பாடுகளையோ அங்கு வெளிப்படுத்த முனையக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அமைச்சுக்கள் தொடர்பில் அறிக்கைகள் விடுக்கப்படுவதற்கு முன்னர் செயலாளர்கள் அல்லது ஊடகச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பெற்றே அவற்றை வெளியிட வேண்டுமென பிரதமர் ரணில் இதன்போது வலியுறுத்தினார்.