சவூதி அரேபியாவானது வளைகுடா பிராந்தியத்திலுள்ள தனது எதிராளியான கட்டாரை ஒரு தீவாக மாற்றும் வகையில் அந்நாட்டிற்கும் தனது நாட்டிற்குமிடையில் பாரிய கால்வாயொன்றைத் தோண்டத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டார் தீவிரவாதத்திற்கு உதவி வருவதாகத் தெரிவித்து அந்நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சவூதி அரேபியா கடந்த வருடம் துண்டித்ததையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது.
இந் நிலையில் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் சல்மானின் சிரேஷ்ட ஆலோசகரான சவுத் அல் கஹ்தானி, சவூதி அரேபியாவுக்கும் கட்டாருக்குமிடையிலான நில ரீதியான இணைப்பைத் துண்டிக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையில் பாரிய கால்வாயொன்றைத் தோண்டுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சல்வா தீவு திட்டம் குறித்து டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சல்வா தீவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விபரங்களுக்காக தாம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் அந்த மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திட்டம் பிராந்தியத்தின் பூகோள ரீதியான தரைத்தோற்ற அமைப்பையே மாற்றுவதாக அமையும் எனவும் அவர் கூறினார்.
580 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான செலவில் ஸ்தாபிக்கப்படவுள்ள மேற்படி கால்வாய் 60 மைல் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அந்தக் கால்வாயின் ஒரு பகுதியை அணுசக்தி கழிவை சேமிப்பதற்கான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் மேற்படி திட்டத்தை முன்னெடுக்க கால்வாய்களைத் தோண்டுவதில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள பெயர் வெளியிடப்படாத 5 கம்பனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கம்பனியில் ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொள்ளும் கம்பனி தொடர்பில் இந்த செப்டெம்பர் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் பிராந்திய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி டுவிட்டர் செய்தி குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளோ அன்றி கட்டார் அரசாங்கமோ விமர்சனம் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.